முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண ஒழுங்குப்படுத்தல்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும். இது தொடர்பில் சகல முச்சக்கர வண்டி சங்கங்களுடன் கலந்துரையாடி விரைவில் உகந்த நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது 12 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பயணிகளிடம் முச்சக்கர வண்டி சாரதிகள் சீரான முறையில் கட்டணத்தை அரவிடுவதில்லை..
இந்த பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டுமாக இருந்தால் முச்சக்கர வண்டி கட்டணத்துக்கான ஒழுங்குப்படுத்தல்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும்.முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை மீட்டரினூடாக செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் சட்ட ரீதியாக கட்டாயப்படுத்த வில்லை.
மீட்டர்களை பொருத்துவதை கட்டாயப்படுத்துவதற்கான சட்டம் இருந்தாலும் அதனை இன்னும் நடைமுறைப்படுத்த வில்லை.
இது தொடர்பில் நாட்டில் உள்ள சகல முச்சக்கர வண்டி சங்கங்களுடன் கலந்துரையாடி இது குறித்து முடிவெடுப்பது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.