கிழக்கில் நான் கட்டளை தளபதியாக இருந்த காலத்தில் சஹரான் மற்றும் சிலர் அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி மோசமான கருத்துக்களை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதன்போது சஹரானையும்  தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்களையும் வரவழைத்து எச்சரித்து அனுப்பினேன்.  ஆனால் அப்போது சஹரான் யாரென்று எனக்கு தெரியவில்லை என  ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.எ.எ.எல் பெரேரா தெரிவித்தார்.

 

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.எ.எ.எல் பெரேரா இந்த காரணிகளை கூறினார்.

நான் கிழக்கு பொறுப்பதிகாரியாக  இருந்த காலத்தில் சஹரானின்  தலைமையில் தவ்ஹித் ஜமாஅத் மற்றும் வேறு சில குழுக்களும் உருவாகியது. இவர்களுக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதும் தெரிய வந்தது. அதேபோல் இனவாத அடிப்படைவாத கருத்துக்களை பரப்பும் இணையதளங்கள் பல கண்டறியப்பட்டது.

அத்துடன் அரபி மயமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலரும் அடையாலம் காணப்பட்டனர். இவர்கள் வெளிநாடுகளின் இருந்து வந்திருந்தனர். இவர்கள் குறித்து விசாரணை நடத்தும் போது எதாவது அரசியல் கட்சிகளின் பெயர்களை கூறுவார்கள். ஆனால் முஸ்லிம் கட்சிகளுடன் உண்மையில் தொடர்பில் இல்லாத நபர்கள் இவர்கள். இவ்வாறான பல விடயங்களை நாம் தேடிக்கொண்டே இருந்தோம்.

இந்நிலையில் பி.எம்.ஜி.ஜி என்ற அமைப்பு காத்தான்குடியில் ஒரு அடிப்படிவாத பத்திரிகையை பிரசுரித்து வந்துள்ளது. ஏனைய மத செயற்பாடுகளை விமர்சித்து மோசமான எழுதினர். இவர்களை எல்லாம் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளேன். அதேபோல் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்களையும் விசாரணைக்கு அழைத்தோம். ஏனெனில் தர்கா நகர் சம்பவம் போன்று ஒரு கலவரத்தை உருவாக்க திட்டம் இருந்ததாக அறிய முடிந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.