நாட்டிற்குள் கப்பல் மூலம் கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களில் மருத்துவ கழிவுகள் காணப்படின் அது பாரிய ஆபத்தை தோற்றுவிக்கும். ஆகவே , இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அதன் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே கூறியதாவது ,
வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை மூண்டுள்ளது. அரசாங்கம் நாட்டுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்த கூடிய சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் திருட்டுத்தனமாக கைச்சாத்திட்டது.
அதன்விளைவாகவே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இந்த ஒப்பந்தம் 1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கையை விடவும் ஆபத்தானதாகும். அந்த ஆபத்தான நிலைமை தொடர்பில் அப்போது நாம் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.
ஆயினும் இது தொடர்பில் நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது அந்த விவகாரத்துடன், தொடர்புடைய அமைச்சராக இருந்த மலிக் சமர விக்கிரம வெளிநாட்டு கழிவுகள் நாட்டிற்கு கொண்டுவரப்படுவதற்கான சாத்தியம் இல்லை என தெரிவித்திருந்தார். ஆயினும் அந்த நிலைமை தற்போது தலை கீழாக மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.