ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அமைக்கவுள்ள பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் ஒரு தீர்வை கண்டதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது சிறப்பானதாக அமையும்.
பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுக் கொண்டு தனித்து தீர்மானங்களை மேற்கொள்வார்களாயின் சுதந்திர கட்சியும் அதிரடியான தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதத்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று புதன்கிழமை கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்தும் கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சி ரீதியில் முன்வைக்கப்பட்டது. மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி நீதிமன்றத்தில் மனு தொடர்பிலான நியாயாதிக்கத்தை கோர முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என நீதிமன்றம் அறிவித்தால் புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் தேர்தலுக்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட முடியும் . இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி உரிய தீர்மானத்தை விரைவில் முன்னெடுப்பார்.
கேள்வி- பரந்துப்பட்ட கூட்டணி தற்போது எந்த அளவிற்கு வெற்றிப் பெறும் நிலையில் காணப்படுகின்றது.
பதில்- இரு தரப்பின் பேச்சுவார்த்தைகளும் இதுவரையில் திருப்தியளிக்கும் விதத்திலே காணப்படுகின்றது. இருப்பினும் ஒரு சில விடயங்கள் மாத்திரம் இழு பறி நிலையில் காணப்படுகின்றது.
கேள்வி- பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில்- பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் ஊடாகவே உத்தேச தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் பேசப்படவில்லை. இருப்பினும் அதுவே மிக முக்கிய காரணியாக காணப்படுகின்றது. பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுக் கொண்டு அவர்கள் தனித்து செயற்பட முடியாது.
ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவித்த பிறகு அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது பயனற்றதாகவே காணப்படும். இதுவரையில் இவ்விடயம் தொடர்பில் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.
ஒருவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அவர்கள் மாத்திரம் தனித்து தீர்மானித்தால் சுதந்திர கட்சியும் சில அதிரடியான தீரமானங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்.