மலையக மக்களின் விடயத்தில், சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வேட்பாளருக்கே ஆதரவு என்ற விடயத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி ஏனைய கோரிக்கைகளை மழுங்கடிக்க வேண்டாம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.
கண்டியை தளமாகக்கொண்டியங்கும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கை அரசியலில் இனிவரும் நாட்கள் மிக முக்கியமானவை. தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் சிறுபான்மையினத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் தேசிய கட்சிகள், பேச்சுகளை நடத்த முற்படும். எனவே, நாம் வழிப்புடனும் மக்கள்சார் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் தயார் நிலையிலேயே இருக்கவேண்டும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். உரிமைசார் கோரிக்கைகளும் இருக்கின்றன. எனவே, சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வேட்பாளருக்கே ஆதரவு என்ற விடயத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி ஏனையக் கோரிக்கைகளை மழுங்கடிக்க வேண்டாம்.
மலையகம் என்றதுமே சம்பள பிரச்சினை மட்டும்தான் என்ற விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை நிலைமை அதுவல்ல. தீர்க்கப்படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் முன்னுரிமை வழங்கப்படவேண்டிய விடயங்களில் இந்த சம்பளப் பிரச்சினையும் ஒன்று. எனவே, நாம் தூரநோக்குடன் செயற்படவேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்துக்கு முடிவு கட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்கான சிறந்த மாற்று வழி என்ன என்பது சம்பந்தமாக ஆராய்ந்தோம். இதற்கமைய பெருந்தோட்டங்களை, தோட்டத் தொழிலாளர்களுக்கே பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே சிறப்பான தேர்வு என கண்டறிந்தோம்.
இதை வெற்றிகரமாக செய்துமுடிக்கவேண்டும் என்பதுடன், தொழிலாளர்கள் நல்ல நிலைமைக்கு வரும்வரையில் அரசாங்கம் கைகொடுக்கவேண்டும். காணியை பகிர்ந்தளிப்பதுடன் மட்டும் அரசாங்கத்தின் கடப்பாடு முடிந்துவிடாது.
அத்துடன், மலையகத் தமிழர்களும் தேசிய இனம்தான். அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
இவற்றை நிறைவேற்றுவதற்கு எவர் முன்வருகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி கூடி முடிவெடுக்கும். இது குறித்து மக்களுடனும் நாம் கலந்துரையாடுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.