வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென ஐநாவின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் றிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.
சிறீலங்காவில் கடந்த பத்து நாட்களாக இலங்கையின் பல இடங்களுக்கும் பயணம் செய்து நிலமைகளை ஆராய்ந்த அவர் பயண இறுதி நாளான நேற்று செய்தியாளர் சந்திப்பை நடாத்தியிருந்தார்.
இங்கு கருத்து வெளியிட்ட அவர், மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளைக் கொடுத்து, கடந்த ஆண்டு பதவிக்கு வந்த சிறிலங்கா அரசாங்கம் போரினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
சிறீலங்காவில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் சில அவசரமானதும் முக்கி யமானதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமெனவும், அத்துடன் அங்கே படைக்குறைப்பு மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அத்துடன் பொதுமக்களின் செயற்பாடுகளிலிருந்து படையினர் அப்புறப்படுத்தப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், நீண்டகாலமாக எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும்.
இராணுவத்திடம் உள்ள அதிகாரங்களை சிவில் அதிகாரிகளுக்கு மாற்றுவது தொடர்பான தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சிறிலங்காவில் இனங்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கையீனங்கள் நிலவுகின்றன. இந்த நம்பிக்கையீனங்கள் களைப்படுதல் அவசியம்.
நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளின் மீதே மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்தது, சிறுபான்மையினரின் உரிமைகளை உதாசீனம் செய்து, அந்த நம்பிக்கைகளை அரசாங்கம் சிதைத்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.