தென்கொரியா வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷியா, சீனா போர் விமானங்களை விரட்டியடித்ததாக தென்கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள வான்வழி மண்டலத்துக்குள் ரஷியா மற்றும் சீனாவின் போர் விமானங்கள் நுழைந்ததாகவும், தங்கள் ராணுவம் அவற்றை விரட்டியடித்ததாகவும் தென்கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “3 ரஷிய போர் விமானங்களும், சீனாவின் 2 போர் விமானங்களும் தென்கொரியா வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தன. அதனை தொடர்ந்து தென்கொரிய ராணுவ விமானங்கள் அங்கு விரைந்து, அந்நிய நாட்டு விமானங்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தின. அதன் பின்னர் அந்த விமானங்கள் தென்கொரியா வான்பரப்பில் இருந்து திரும்பி சென்றன” என கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தென்கொரியாவில் உள்ள ரஷியா மற்றும் சீனா தூதரகங்களுக்கு சம்மன் அனுப்பி கண்டனத்தை பதிவு செய்துள்ளதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் ரஷிய ராணுவம் அத்துமீறி நுழைந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியா மற்றும் சீனா எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.