ஐ.எஸ் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவிடம் இருந்து ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை திட்டமிட்டதை விடவும் வேகமாக இடம்பெறுவதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி குறிப்பிட்டுள்ளார்.
ஈராக் மற்றும் குர்திஸ் படையினருக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் சமசரசத்தை இது காட்டுவதாக அபதி தெரிவித்தார்.
மொசூலின் கிழக்கு மற்றும் வடக்கில் குர்திஸ் பாரிய அளவான தாக்குதல் ஒன்றை ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே ஈராக்கிய பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மொசூலின் கிழக்கில் இருந்து ஈராக்கிய படை முன்னேறி வருவதோடு சிறப்புப் படையினரும் தற்போது இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர்.
மொசூல் நகர் கடந்த 2014 தொடக்கம் ஐ.எஸ் வசம் இருப்பதோடு, அந்த குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பிரதான நகரும் இதுவாகும்.
மொசூல் நகரை மீட்கும் இராணுவ நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. நகரில் தொடர்ந்தும் 1.5 மில்லியன் மக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. நகருக்குள் இருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் ஏற்கனவே சில ஐ.எஸ் தலைவர்கள் நகரில் இருந்து தப்பியோடி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும் நகரில் 5,000 ஐ.எஸ் போராளிகள் வரை தொடர்ந்தும் இருப்பதாக நம்பப்படுகிறது.