பொது கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஈழத்தில் என்ன நடக்கிறது? என்பது குறித்த பொது கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்து வைகோ மற்றும் ம.தி.மு.க கட்சியின் முன்னாள் நிர்வாகி கண்ணப்பன் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், குறித்த இருவரும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டு கியூ பிரிவு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் வைகோ மீது மாத்திரம் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கு விசாரணைகள் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
சுமார் 8 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் இறுதி விசாரணைகள் முடிந்த நிலையில், நேற்று வழக்கின் தீர்ப்பு மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வழங்கியிருந்தார்.
சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம், தேசதுரோக சட்டப் பிரிவு ஆகியவற்றில் குற்றச்சாட்டுகள் முழுமையாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டவில்லை.
எனவே, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டபட்டவருக்கு வழங்கி, இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.