கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் 01ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமை, சட்ட விரோதமானது, அநியாயமானது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சரியான புலனாய்வுத் தகவல்களை புறக்கணித்து இரண்டு சந்தேகநபர்களும் நூற்றுக் கணக்கான உயிர்களை பலிகொடுப்பதற்கு இடமளித்தமை கொலைக் குற்றச்சாட்டு என்று அந்த மீளாய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.