முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது முன்னைய அமைச்சுப் பதவிகளை நாளைய தினம் (இன்று) பொறுப்பேற்க வேண்டும். அதற்கான சிபாரிசு கடிதங்களை ஜனாதிபதிக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்றைய சந்திப்பின்போது கேட்டுக்கொண்ட போதிலும் முஸ்லிம் எம்.பி. க்கள் அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் பொறுப்பேற்பதை நிராகரித்தார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும்வரை தங்களால் அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் பொறுப்பேற்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார்கள். இதன்போது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஒருவாரத்தில் தீர்ப்பேன் என்று பிரதமர் உறுதியளித்திருக்கின்றார்.
நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான முஸ்லிம் எம்.பி. க்களின் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா, எ.எல்.நசீர், அப்துல்லாஹ் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றதும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன் என்று தெரிவித்தார். அதற்கு மறுப்புத் தெரிவித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பக்க நியாயங்களை விலக்கினார்கள்.
ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து அநாவசிய கைதுகள் இடம்பெற்றுள்ளன. கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை. கிழக்கில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பெரும் எண்ணிக்கையிலுள்ளன. கல்முனை, வாழைச்சேனை, தோப்பூர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எம்மால் அமைச்சுப் பொறுப்புகளை மீளப்பெறமுடியாது. இந்தத் தீர்மானத்தை நாம் எமது அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மானித்திருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன. அவ்விவகாரம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சுப் பதவிகளை ஏற்பது தொடர்பில் நாம் உடன்படவில்லை எனவும் முஸ்லிம் எம்.பி. க்கள் தெரிவித்தார்கள்.
ஒரு வாரத்தில் தீர்வு
இதேவேளை கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் தரப்பு தங்கள் பக்க நியாயங்களை முன்வைத்துள்ளன. இது தொடர்பான தீர்வுகளுக்காக அதிகாரிகள் துரிதமாக இயங்கி வருகிறார்கள். இன்னும் ஒரு வாரகாலத்தில் இவ்விவகாரத்துக்கு தீர்வு பெற்றுத் தருவேன் என பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தார்.
இறுதியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் வரை அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில்லை தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது.
இதேவேளை இந்த சந்திப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர், அடுத்த கட்டமாக உள்ளூராட்சி பிரிவுகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இன்றிரவு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்பதில்லை என்று நேற்று (21) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பில் 22 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
இதன்பிரகாரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் பராாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிற்பகல் 2 மணியளவில் ஏ.எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். பிரதமரிடம் பேசவேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.
முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளில் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை பிரதேச சபை எல்லை விவகாரம், தோப்பூர் உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்பின்னர் பிற்பகல் 3:30 மணியளவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்கள். ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. கல்முனை நிர்வாகப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டுமென ரவூப் ஹக்கீம் இதன்போது வலியுறுத்திக் கூறினார்.
முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் நாளை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறும், இன்னும் ஒரு வாரத்துக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாகவும் பிரதமர் இதன்போது கூறினார். ஆனால், கூறப்படுவதுபோல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை என்றும், இதற்கு தீர்க்கமான முடிவுகளை எட்டும்வரை அமைச்சுகளை பொறுப்பேற்பதில்லை எனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் தங்களது நிலைப்பாட்டை பிரதமரிடம் தெரிவித்தனர்.
பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் எம்.பி.க்கள் காட்டிய தீவிரத்தன்மையை புரிந்துகொண்ட பிரதமர், உடனே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபயவர்தனவுக்கு பணிப்புரை விடுத்தார். நேற்று இரவு அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியிருந்தது.