ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்

451 0

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு, சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் செய்துகொண்ட ஹாங்காங், சீனாவுடன் மட்டும் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை.

பல ஆண்டுகளாக நடந்து பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் ஹாங்காங் ஸ்தம்பித்தது.

மக்களின் தொடர் போராட்டத்துக்கு ஹாங்காங் நிர்வாகம் அடிபணிந்தது. கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் கடந்த மாதம் அறிவித்தார்.

ஆனால் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர்.

பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ‘பெப்பர் ஸ்ப்ரே’ அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

இதற்கிடையில், யுவான் லாங் மாவட்டத்தில் உள்ள சுரங்க ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்களை குறிவைத்து மர்ம கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் நடத்தியது.

வெள்ளை நிற ‘டி-சர்ட்’ மற்றும் முகமூடி அணிந்த அந்த கும்பல், போராட்டத்தை முடித்து திரும்பியவர்களை மரக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கியது.

இதனால் ரெயில் நிலையத்தில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ரத்தம் சொட்டச்சொட்ட அங்கும், இங்குமாக ஓடினர்.

இந்த தாக்குதலில் 45 பேர் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர். ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

அந்த வீடியோ தற்போது அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாக்குதல் நடந்தபோது போலீசார் ஏன் விரைந்து சென்று, அந்த கும்பலை தடுக்கவில்லை என எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதே சமயம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.