இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தியாக வேண்டும், ஜனாதிபதி பதவிக்காலம் குறித்து ஆராய்வதாக கதைகளை கூறிக்கொண்டு தேர்தலை பிற்போட முடியாது, ஜனாதிபதி தேர்தலை தடுக்க சட்டத்தாலும் முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி தெரிவித்தார்.
அதேபோல் தெரிவுக்குழு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தால், ஜனாதிபதி சென்றாக வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், நிறைவேற்று ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் எனவும் அவருக்கான அதிகாரங்கள் குறித்தும் 1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் பிரகாரம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதில் பதவிக்கு காலத்தை மாற்றவே 19ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் பலரது ஒத்துழைப்புகள் இருந்தது அதற்கமையவே நிறைவேற்று ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைக்கப்பட்டது.
நிகழ்கால ஜனாதிபதி 2015 ஜனவரி 9ஆம் திகதி பதவியேற்றார். அன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதியின் பதவிக்காலம் இருக்கும். இதில் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஆகவே ஜனவரி 8ஆம் திகதி 2020ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரும். ஆகவே தெளிவாக கூறப்பட்டுள்ள ஒரு விடயம் குறித்து இனியும் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதியும் அதனை தெரிந்துகொள்ள வேண்டும். ஆகேவ ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆகவேண்டும். சட்டத்தால் கூட தள்ளிப்போட முடியாது.
அதேபோல் தேசிய பாதுகாப்பு விடயங்கள் குறித்து ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறியாக வேண்டிய கடமையும் உள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி வரமாட்டார் என்ற கருத்து நிலவியது. ஆனால் தெரிவுக்குழு என்பது பாராளுமன்ற கட்டளைகளின் கீழ் சபாநாயகரின் அதிகாரத்தில் செயற்படுவது என்றபடியால் தெரிவுக்குழு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தாள் ஜனாதிபதி சென்றாக வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்புக்கூற வேண்டும். அவரால் பாராளுமன்றத்திற்கு வர முடியாது என்றால் ஜனாதிபதி இருக்கும் இடத்திற்கு தெரிவுக்குழு சென்று வாக்குமூலம் பெற முடியும்.
மேலும் இரசாயன கழிவுகள் இலங்கைக்கு கொண்டவரைப்பட்டுள்ளது. இது சூழலுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்கு காலத்தில் நிதி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது இவ்வாறான பொருட்கள் கொண்டுவருவதை அங்கீகரித்துள்ளனர்.
இது 2013ஆம் ஆண்டு ஆட்சியால் இடம்பெற்றது. இந்த குப்பைகள் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகின்றது என்பதற்கான சகல ஆதாரங்களும் உள்ளன. இதில் பாவிக்கப்பட்ட மெத்தைகள் இருக்கின்றதும் தெளிவாக தெரியும். யார் அனுப்புகின்றனர் இங்கு யாரின் பெயரின் எந்த நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது என்பது என்ற சகல காரணிகளும் உள்ளது. அப்படி இருந்தும் இந்த ஆட்சியிலும் எவராலும் இதனை பிடிக்க முடியவில்லை. இரு நாட்களுக்கு முன்னரே கண்டறிந்துள்ளனர். சிங்கப்பூர் உடன்படிக்கை செய்யாதே இந்த குப்பைகள் வருகின்றது என்றால் சிங்கப்பூர் உடன்படிக்கை செய்தால் இலங்கை ஆசியாவின் குப்பைமேடாக மாறும் என மேலும் தெரிவித்துள்ளார்.