தமிழ் மக்களின் இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அடிப்படையிலான தீர்வினை நாம் வலியுறுத்தி வருகின்றோம் என வாகரை கதிரவெளி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல் செயற்பாட்டினை வலுப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தங்கியிருந்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை மேற்கொண்டுவரும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு வாகரை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கதிரவெளி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்….
தொழில்நுட்ப உதவியை உள்ளீர்த்து எமது பிரதேசங்களின் இயல்பு மாறாது எழில் குலையாது எமது காலில் நாம் நிற்கக்கூடியதான அபிவிருத்தியை மேற்கொன்டு உங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். அவ்வாறான செயற்றிட்டங்கள் உங்களால் முன்வைக்கப்படும் போது புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்கள் முஸ்லீம்களது திட்டமிட்ட நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை அதிக விலை கொடுத்து வாங்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிக பணத்திற்கு வாங்குகிறார்கள் என்பதற்காக இன்று நாம் எமது காணிளை முஸ்லீம்களுக்கோ ஏனையவர்களுக்கோ விற்போமாயின் எதிர்காலத்தில் எமது இருப்பே பெரும் கேள்விக்குறியாகிவிடும்.
குடும்ப வறுமை காரணமாக ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் முஸ்லீம்களால் திட்டமிட்டு மதமாற்றம் செய்யப்பட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை அறியும் போது உண்மையில் வேதனையாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இருந்து எமது பெண்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்குண்டு. அந்த வகையில் உங்கள் உங்கள் கிராமங்களில் எளிதாக கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை கொண்டு செயற்படுத்தக் கூடிய தொழில் முயற்சிகளை உருவாக்கி கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.
இவ்வாறு எமது இருப்பும் உரித்துக்களும் பறிபோகாதிருக்க வேண்டுமாயின் நம்மை நாம் பலப்படுத்திக்கொள்வதே ஒரே வழியாகும். அதற்காகத்தான் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வு வேண்டுமென நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் திருமதி ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர் திருமதி இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜாதுரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் சதீஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக கதிரவெளி பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் மாலை அணிவித்து விருந்தினர்களை அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து சி.வி.விக்னேஸ்வரன் ஐயா உள்ளிட்ட பிரமுகர்கள் மங்கல விளக்கேற்றியிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வை அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் கே.ரூபன் அவர்கள் வரவேற்புரையை வழங்கியதுடன் தலைமை தாங்கி நடாத்தியிருந்தார். மருத்துவரும் சமூக செயற்பாட்டாளருமான பு.சோதிராஜ் அவர்கள் தலைமையுரை ஆற்றியிருந்ததுடன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட இருக்கும் இல்மனைற் மணல் அகழ்வு குறித்த ஆவணத் தொகுப்பையும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் மக்கள் சார்பில் கையளித்திருந்தார்.
தமிழ் மக்கள் கூட்டாணியின் கொள்கைகள் குறித்து த.சிற்பரன் அவர்களும், மாற்று அரசியலின் அவசியம் குறித்து இரா.மயூதரன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட ரீதியான செயற்பாடுகள் குறித்து எஸ்.சோமசுந்தரம் அவர்களும் உரையாற்றியிருந்தனர். இந்நிகழ்வில் கதிரவெளி பகுதி மக்கள், சமூக செயற்பாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.