கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமானது.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் சமாதியில் இன்று காலை நடைபெற்ற வணக்க நிகழ்வைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய விழா ஆரம்பமானது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் ஆரம்பமான கலாசார பவனி கல்லடியில் இருந்து ஆரம்பமானது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவினங்களின் பாரம்பரிய கலைகலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த கலாசார பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் சுவாமி பிரபு பிரபானந்த ஜி மற்றும் கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட கலை இலக்கிய ஆர்வர்கள் உட்பட பல்வேறு கலைகலாசார அமைப்புகளும் கலந்துகொண்டன.
இன்று ஆரம்பமான மாகாண தமிழ் இலக்கிய விழா மூன்று தினங்கள் மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இரண்டு நாட்கள் இலக்கிய ஆய்வரங்கு நடைபெறவுள்ளதுடன் இந்த ஆய்வரங்கில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கலை இலக்கியத்துடன் தொடர்புடைய பேராளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தினங்களும் காலை நிகழ்வாக ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளதுடன் பிற்பகல் நான்கு மணி தொடக்கம் ஏழு மணி வரையில் கலை,கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இன்று மாலை நடைபெறும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை நிகழ்வில் கிழக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கலந்துகொள்ளவுள்ளார்.
மூன்றாம் நாள் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த மாகாண இலக்கிய விழாவில் கலைத்துறைக்கு பெரும்பங்காற்றிய மூத்த கலைஞர்கள் 12பேர் வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இளம் கலைஞர்கள் 18பேர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதுடன் சிறந்த நூல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் ஆர்வலர்கள், மாணவர்கள், கலைஞர்கள்,பொதுமக்களை கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.