உத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடிக்கு மின்சார கட்டணம் செலுத்தும்படி பில் வந்தது முதியவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஹாப்பூர் நகரில் சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம். இவரது மனைவி கைரு நிஷா. இந்த தம்பதியின் வீட்டுக்கு மின்சார கட்டணம் பில் வந்துள்ளது. அதனை பார்த்த ஷமீம் அதிர்ச்சி அடைந்து உள்ளார். அதில் அவர் ரூ.128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அவர் கட்டணம் செலுத்த தவறிய நிலையில், வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 2 கிலோ வாட் மின் இணைப்பு கொண்ட வீட்டுக்கு இவ்வளவு தொகையா? எனது வேண்டுகோளை ஒருவரும் கேட்கவில்லை. ஒரு முழு நகரத்துக்கான கட்டணம் கட்டும்படி மின் வாரியம் இந்த பில்லை என்னிடம் தந்துள்ளது.
நாங்கள் மின் விசிறி மற்றும் குழல் விளக்கு பயன்படுத்துகிறோம். பின் எப்படி இவ்வளவு பெரிய தொகைக்கு பில் வரும். ஏழைகளான நாங்கள் இந்த தொகையை எப்படி செலுத்த முடியும்? சராசரியாக ஒரு மாதத்திற்கு எனக்கு ரூ.700 அல்லது ரூ.800 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் மே மாதத்தில், காய்கறி விற்பனை செய்யும் ஜெகன்னாத் (வயது 36) என்பவருக்கு ரூ.8.64 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்தது. பலமுறை அவர் மின் வாரியத்திற்கு அலைந்தும் பலனில்லாத நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளானார். பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் மின் வாரியமோ, தசம புள்ளி விடுபட்டு போனதில் இந்த தவறு நடந்துள்ளது என கூறியது. ஜெகன்னாத் தற்கொலைக்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என கூறிய வாரியம் பின்பு கடமையில் இருந்து தவறியதற்காக கணக்கு உதவியாளர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்தது.