பார் உரிமையாளர் தற்கொலையால் சோதனை: போலீஸ்-டாஸ்மாக் அதிகாரிகள் 10 பேர் மீது வழக்கு

273 0

பார் உரிமையாளர் தற்கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸ் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் திருப்போரூரை சேர்ந்த பார் உரிமையாளர் நெல்லையப்பன் கடந்த மே மாதம் 28-ந்தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி பரபரப்பான வீடியோ ஒன்றையும் இறப்பதற்கு முன்பு வெளியிட்டு இருந்தார். அதில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் பெயரை குறிப்பிட்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக டி.எஸ்.பியாக இருந்த சுப்புராஜிடம் நெல்லையப்பன் புகார் அளித்திருந்தார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினாலேயே தற்கொலை செய்வதாக கூறி இருந்தார். இந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லையப்பன் தற்கொலை செய்து கொண்ட தன் பின்னணியில் அவரை மிரட்டி போலீசாரும் பணம் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2 மாதங்களாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, காஞ்சிபுரத்தில் 20 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. போலீஸ் அதிகாரிகள், டாஸ்மாக், கலால் துறை அதிகாரிகள் 10 பேரின் வீடுகளில் நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பார் உரிமையாளர் நெல்லையப்பன் மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிகளில் சுமார் 7 பார்களை நடத்தி வந்தார். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் முறைகேடாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. இதனை சுட்டிக் காட்டிய போலீசார் நெல்லையப்பனிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு பணத்தை மாமுலாக தர வேண்டும் என்று கேட்டு லஞ்சம் வாங்கியுள்ளனர்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க் கள் உள்பட 7 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

1. டி.எஸ்.பி. சுப்புராஜ் (மாமல்லபுரத்தில் பணியாற்றியவர்)

2. இன்ஸ்பெக்டர் கண்ணன் (திருப்போரூர் முன்னாள் இன்ஸ்பெக்டர்)

3. கூடுதல் டி.எஸ்.பி. மாணிக்கவேல் (காஞ்சிபுரம் மதுவிலக்கில் பணியாற்றியவர்)

4. டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் (மதுவிலக்கு காஞ்சிபுரம்)

5. இன்ஸ்பெக்டர் பாண்டி (கேளம்பாக்கத்தில் பணிபுரிந்தவர்)

6. இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி (மாமல்லபுரம் மதுவிலக்கில் பணிபுரிந்தவர்)

7. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் (மதுராந்தகம் மதுவிலக்கு)

இவர்கள் தவிர காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரான அய்யாவு, கலால்துறை உதவியாளராக பணியாற்றிய அகமதுல்லா, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார்

 

இவர்கள் அனைவரும் சேர்ந்து தற்கொலை செய்த பார் உரிமையாளர் நெல்லையப்பனிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 120பி (கூட்டு சதி), 420 (மோசடி), லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் 10 அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ள இந்த அதிகாரிகள் தங்களது கடமையை மீறி முறைகேடாக செயல்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பார் நடத்துவதற்கு பார் உரிமையாளர்களிடம் இருந்து மாதந்தோறும் லஞ்சம் பெற்றதன் மூலம் முறையாக அரசுக்கு செல்ல வேண்டிய வருவாயில் இழப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 7 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 3 அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசார், 10 அதிகாரிகள் மீதும் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 10 பேரிடமும் விசாரணை நடத்தி அது தொடர்பான வாக்குமூலத்தையும் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி உள்ள 10 அதிகாரிகளும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. லஞ்ச புகாரில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரிகளில் டி.எஸ்.பி. சுப்புராஜ் மாமல்லபுரத்தில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்தில் பணிபுரிந்து வருகிறார்.

காஞ்சிபுரம் மதுவிலக்கில் பணியாற்றிய மாணிக்கவேல் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதியில் இருந்து கடந்த மே மாதம் வரையில் அங்கு பணிபுரிந்துள்ளார்.

கேளம்பாக்கத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாண்டி கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த மே மாதம் வரையில் 1½ ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இந்த காலக்கட்டத்தில் தான் இவர்கள் மீது லஞ்சப்புகார் கூறப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான அதிகாரிகள் அனைவரது சொத்து விவரங்கள் பற்றியும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கு விசாரணையை கோர்ட்டில் நடத்தி குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 அதிகாரிகளுக்கும் தண்டனை வாங்கி கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.