மத்திய ஆட்சியில் 17 ஆண்டுகள் அங்கம் வகித்தாலும் காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண தி.மு.க. தவறிவிட்டது என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று பொதுத் துறை, நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
நேரடி ஒளிபரப்பு
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- வீட்டு வசதி துறையின் 2016-2017-ம் ஆண்டு பட்ஜெட்டில், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன?. திருமழிசை அறிவியல் நகரம், தோப்பூர் உச்சம்பட்டி அறிவியல் நகரம் என்று இப்படி பல அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அது இன்னும் கிடப்பிலே தான் இருக்கிறது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதை ரூ.40 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அவர்களின் மருத்துவ செலவுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த அவையில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய உரிமை வாக்களித்திருக்கக்கூடிய மக்களுக்கு நிச்சயம் இருக்கிறது. சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ரூ.60 கோடி செலவாகும் என்று நீங்கள் சொல்லலாம். செலவு முக்கியமா?, வெளிப்படைத்தன்மை முக்கியமா? என்பது தான் எனது கேள்வி.
மத்திய அரசு மதிப்பதில்லை
பெயரளவுக்கு நியமித்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கிறது. கர்நாடக அரசு காவிரியில் 66 டி.எம்.சி. நீரை தேக்கி வைத்துக்கொள்வதற்கு மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை மீறுகிற அவர்களின் இந்த முயற்சியை, நாம் தடுத்தாக வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம். ஆனால், மத்திய அரசு ஏற்றதாக தெரியவில்லை. இப்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்து இருக்கிறார்கள். சட்டமன்றத்தின் உணர்வுகளை மத்திய அரசு மதிப்பதே இல்லை.
தமிழக அரசு வழக்கு
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார். இந்த 7-வது கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஜூன்) 28-ந் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று வரை சட்டமன்ற நிகழ்வுகளின் சுருக்கம் 49 மணி நேரம் 50 நிமிடம் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த கூட்ட நிகழ்வுகளின் சரிபாதி வழங்கப்பட்டுள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
மு.க.ஸ்டாலின்:- நம்முடைய முதல்-அமைச்சர் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று பேசியிருக்கிறார். அப்போது, கோதாவரியில் உபரியாக இருக்கக்கூடிய 300 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு திருப்பிவிடக்கூடிய வகையில் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக திட்டங்களுக்கு சுமார் ரூ.8,900 கோடி வரை நிதியும் கேட்டிருக்கின்றார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- 2017-2018-ம் ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்திலேயே நான் காவிரி பிரச்சினை குறித்து பேசினேன். அதற்கு அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
தி.மு.க. எதிர்ப்பு
அதுமட்டுமல்ல, மேகதாது அணை கட்டுகின்ற செய்தி வந்தவுடன், 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளோம். இப்போது மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதையும் நாங்கள் மேற்கோள்காட்டி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட துறை மந்திரிக்கும், எந்தவித அனுமதியும் கொடுக்கக்கூடாது என்று கூறி நாம் கடிதம் எழுதியிருக்கிறோம். பிரதமரை சந்தித்தபோதும், மத்திய நீள்வளத் துறை மந்திரியை சந்தித்தபோதும், மேகதாது அணை கட்டக்கூடாது, கட்டப்பட்டால் தமிழகம் வறட்சியாக மாறிவிடும், அதை கைவிட வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.
அமைச்சர் ஜெயக்குமார்:- மத்தியில் பா.ஜ.க. கையில் அதிகாரம் உள்ளது. மத்திய ஆட்சியில் நீங்கள் 17 ஆண்டுகள் அங்கம் வகித்தீர்கள். காவிரி பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை என்று எத்தனையோ பிரச்சினை இருந்தது. அதற்கு நீங்கள் தீர்வு கண்டிருக்கலாம். இப்போது எதிர்க்கட்சி தலைவராக இலவச ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
(இதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
தி.மு.க. தவறவிட்டது
மு.க.ஸ்டாலின்:- அவர் தரத்தை காட்டுகிறார். வேறொன்றும் இல்லை. நாங்கள் என்ன செய்தோம் என்று கேட்கிறார். ஒவ்வொரு ஆகஸ்டு 15-ந் தேதி தேசிய கொடியை கோட்டையில் ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தோம். சேலம் உருக்காலை திட்டத்தை பெற்றுக் கொடுத்தது தி.மு.க. தான். மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதும் தி.மு.க. தான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சேலம் உருக்காலை திட்டம் தனியார் மயமாவதைத் தடுத்து நிறுத்தியதும் தி.மு.க. தான். சேது சமுத்திர திட்டத்துக்கு அனுமதி பெற்று தந்ததும் தி.மு.க. தான். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி கொடுத்தபோது, அதை நீங்கள் (அ.தி.மு.க.) மறுத்தீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, டெல்லி சென்று போராடி, வாதாடி அதை பெற்று வந்தோம். இப்படி பெரிய பட்டியலே எங்களிடம் இருக்கிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- காவிரி பிரச்சினை. இது ஒரு மிக உணர்வுபூர்வமான பிரச்சினை. காவிரி நதிநீர் பிரச்சினையை பொறுத்தவரை, சுமார் 15 ஆண்டு காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிரந்தர தீர்வு எட்டப்பட்டிருக்கலாம். அதைத்தான் அவர் (ஜெயக்குமார்) சொல்கிறார். அந்த காலக்கட்டத்தில் தவறவிட்டதன் காரணமாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் மூலமாக பல்வேறு தீர்ப்புகளை பெற்று நாம் அமல்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. 2007-ல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்து 2 மாதம் ஆயிற்று. அந்த 2 மாத இடைவேளையில், நீங்கள் அனைத்தும் செய்திருந்தால் கர்நாடகாவோ, கேரளாவோ, பாண்டிச்சேரியோ நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. அதை தவறவிட்டவர்கள் நீங்கள் தான்.
(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
ஜீவாதார பிரச்சினை
சபாநாயகர் ப.தனபால்:- எதிர்க்கட்சி தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார். முதல்-அமைச்சர் பதில் அளித்தார். இடையில் உறுப்பினர்கள் விவாதம் செய்வதுபோல் செயல்படுவது முறையல்ல. அமைதியாக இருங்கள்.
அமைச்சர் ஜெயக்குமார்:- 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் நீங்கள் இருந்தும் ஜீவாதார பிரச்சினைகளில் காவு கொடுத்து விட்டீர்கள்.
துரைமுருகன்:- காவிரிக்கு நடுவர் மன்றம் வேண்டும் என்று கூறியதே கருணாநிதி தான். அதற்கான இறுதித் தீர்ப்பை பெற்றவரும் கருணாநிதி தான். அரசிதழில் வெளியிட்டது மட்டும் நீங்கள். காரணம், அதற்குள் எங்கள் ஆட்சி போய்விட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எதிர்க்கட்சி துணைத் தலைவர் சத்தமாக பேசினால் ஒன்றும் நடக்காது. நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும். காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி நம்மைவிட வெளியில் இருப்பவர்களுக்கு அதிகமாக தெரியும். ஏழை, எளிய பாசன விவசாயிகளுக்கு முழுமையாக தெரியும். 2007-ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. 2 மாத காலம் இருந்தது. நீங்கள் ஆட்சி அதிகாரத்திலே, மத்தியிலே இருந்தீர்கள், மாநிலத்திலும் இருந்தீர்கள். நீங்கள் நினைத்திருந்தால் அந்த 2 மாத காலத்திலேயே நமக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம். தேவையான அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதற்கு ஒரு வடிவம் கொடுத்திருந்தால், நமக்கு இந்த பிரச்சினை வந்திருக்காது. கிடைக்கின்ற வாய்ப்பை தவறவிட்டுவிட்டீர்கள் என்று தான் சொல்கிறோம். வேறு ஒன்றும் கிடையாது.
உண்மையை மறைக்க முடியாது
அதிகாரம் ஒருமுறை தான் கிடைக்கும். அதை பயன்படுத்துவது தான் உண்மையாக மக்களுக்கு தொண்டு செய்கின்ற நிலை. அதை நீங்கள் தவறவிட்டுவிட்டீர்கள். 2 மாதங்கள் இருந்தது. அமைச்சரவை இலாகா பெறுவதற்கு எத்தனை முறை நீங்கள் டெல்லி போய்விட்டு வந்தீர்கள். ஏன் இதை நிறைவேற்ற முடியாது. வாழப்பாடி ராமமூர்த்தி காவிரி பிரச்சினைக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். எதிர்க்கட்சி தலைவர் தன்னுடைய வாதத் திறமையால் எந்த உண்மையையும் மறைக்க முடியாது.
துரைமுருகன்:- இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சருக்கு ஒன்றும் தெரியாதது அல்ல. பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எதிர்க்கட்சி துணைத் தலைவர் சமாளிக்கிறார். தவறவிட்டுவிட்டீர்கள். பிறகு அதை நியாயப்படுத்தி பேசுவது எந்தவிதத்திலும் சரியாக இருக்காது. 2007-ல் இருந்து 2019 வரை போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- காவிரி பிரச்சினை குறித்து இதே அவையில் ஏற்கனவே நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது. அது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே, அங்கிருந்து நீங்கள் பேசினால், அதற்கு இங்கிருந்து பதில் வரும். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் போடுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேசினார். உங்கள் ஆட்சியில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையில், நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாக குறைத்தீர்கள். மற்ற 6 பேரை பற்றி கவலைப்படவில்லை. ஆனால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக 2 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார். அதை மத்திய அரசுக்கும் அனுப்பியும் வைத்தார். தற்போது, கவர்னர் கையில் அந்த பிரச்சினை உள்ளது.
தூத்துக்குடி பிரச்சினை
மு.க.ஸ்டாலின்:- மத்திய அரசு சார்பில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்-அமைச்சர் மனுவில் கேட்ட புதிய திட்டங்களுக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்துக்கு ஒரு மெகா திட்டமும் இடம்பெறவில்லை. மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, மாநிலங்களுக்கு நிதி தருவதை மறுக்கக்கூடிய மத்திய அரசாங்கத்திடம் உரிமைக் குரல் எழுப்பாதது ஏன்?. ஆனால், மத்திய பட்ஜெட்டை தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் கருத்து தெரிவித்தார். மத்திய பட்ஜெட் தொலைநோக்கு பார்வை கொண்டதா?.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தூத்துக்குடி பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக உள்ளது. இன்னொரு பக்கம் சேலம் 8 வழி சாலை பிரச்சினை. அதுவும் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
விவாதிக்க தயாரா?
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- 8 வழி சாலைக்கு விதிகளுக்கு உள்பட்டு இடம் எடுக்கப்படுகிறது. உங்கள் ஆட்சியிலும் விவசாய நிலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது மத்திய அரசு திட்டம். அவர்கள் கொண்டு வருகிறார்கள். 8 வழிச் சாலை திட்டம் இப்போது விரைவுச் சாலை திட்டமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்:- போராடியவர்களை அழைத்து பேச இந்த அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது. எல்லாம் தலைகீழாகவே இங்கே நடந்து கொண்டிருக்கிறது. வேண்டாத வேலைகள் தான் இங்கே வேகமாக நடைபெறுகின்றன. தேவையானதை கவனிப்பார் யாருமில்லை. வளைந்து கொடுப்பதில் உள்ள ஆர்வம், நிமிர்ந்து எதிர்கொள்வதில் இல்லை.
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழ்நாடு மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது. சின்னப்பிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதுபோல, ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்னார்கள். இதைவிட தமிழக மக்களை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. நாங்கள் கொடுத்தது வாக்குறுதிதான். மிட்டாய் அல்ல. தி.மு.க.வின் வாக்குறுதிகள் குறித்து இதே சட்டமன்றத்தில் ஒரு சிறப்பு விவாதத்தை இந்த சபையில் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் தயாரா?. தோல்வியை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். ஏன் தோற்றோம் என்பதை முதலில் யோசியுங்கள்.
மக்கள் பிரித்து பார்த்து ஓட்டு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- வாக்குறுதி என்ற மிட்டாயை கொடுத்து நீங்கள் ஏமாற்றினீர்கள். பேசி சமாளிக்க பார்க்கிறார். நடந்தது சட்டமன்ற இடைத்தேர்தல். அதில் எப்படி நீங்கள் வாக்குறுதிகளை கொடுக்க முடியும். நாங்கள் அப்படி அல்ல. எதை செய்ய முடியுமோ அதைத்தான் சொன்னோம்.
மு.க.ஸ்டாலின்:- இடைத்தேர்தலில் 22 இடங்களில் 13 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். நீங்கள் 9 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். 9, 13 இதில் எது பெரியது. நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று கருதி வாக்குறுதி அளித்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். அப்போது, நிச்சயம் நிறைவேற்றுவோம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நாடாளுமன்ற தேர்தலுடன், இடைத்தேர்தல் நடந்தாலும் நிலக்கோட்டை, விளாத்திகுளம் தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். மக்கள் பிரித்து பார்த்தே வாக்களித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.