பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் விவகாரங்களை அறிக்கையிடும் விசேட நிபுணர் ரீட்டா இஷாக் நாடியா குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கான 10 நாள் விஜயத்தின் நிறைவில் இன்றைய தினம் கொழும்பில் நடத்திய ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுகின்றமை, சமமற்ற முறையில் தமிழ் சமூகத்தை பாதித்துள்ளது. உரிய நடைமுறைகள் இல்லாமல் காலவரையறையின்றி தடுத்து வைக்கும் வகையிலான குறித்த சட்டம் தொடர்பில் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தின் கீழுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் முக்கியமானதும் கரிசனையுள்ளதுமான ஒன்றாகும்.
இது நல்லிணக்க செயற்பாடுகளில் அரசாங்கத்தின் கடப்பாடாக காணப்படுகின்றது. பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டம் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது என்பதை அடிக்கோடிட்டுகாட்ட விரும்புகின்றேன்.
என்றும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.