நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும், சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டுக்காக தான் பக்கசார்பற்ற மத்திம கொள்கையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் பக்கசார்பின்மையையும் சுயாதீனத்துவத்தையும் பேணுவதுடன் அதற்கு புறம்பாக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மகஒய நீர்வழங்கள் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான வளங்கள், தொழிநுட்பம், இயந்திரங்களைப் போன்றே நாட்டு மக்கள் மத்தியில் ஒரு சுதந்திர சமூகத்தை உறுதிசெய்வதற்கு கடந்த 17 மாத குறுகிய காலப்பகுதியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு எவராலும் முடியாது என்பதுடன், அதன் எதிர்காலப் பயணம் 2020லேயே தீர்மானிக்கப்படும்.
இன்று எவரும் அரசாங்கத்தையும் நாட்டின் தலைவரையும் விமர்சிப்பதற்கு உரிமை கிடைத்துள்ளது.
2015 ஜனவரி மாதத்திற்கு முன்பிருந்த வெள்ளை வான் கலாசாரத்திற்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
நாட்டின் சனத்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முகங்கொடுத்துள்ள சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்ளும் விடயம் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுகிறது.
எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் இலங்கையில் குடிநீர் பிரச்சினையை முழுமையாகத் தீர்ப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
திகாமடுல்லை மாவட்ட மக்களின் குடிநீர்த் திட்டங்களுக்காக மட்டும் இதுவைரயில் சுமார் 20 ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
என்றும் இதன்போது மேலும் தெரிவித்தார்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சினூடாக ஜெய்க்கா நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டதினூடாக மகாஒயா வலயத்திலுள்ள ஒன்பது கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள 14,000 பேர் பயனடையவுள்ளனர். இத்திட்டத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயா கமகே, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாந்துபுள்ளே ஆகியோரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் என் டி ஹெட்டியாரச்சி உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிஷீ சுகானுமா, ஜெய்க்கா ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி தியோசி அமாடா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேநேரம் மஹியங்கனை மக்களுக்கு சுத்தமான நீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் 3500 மில்லின் ரூபா நிதிப்பங்களிப்பில் ஆஸ்திரிய அரசாங்கத்தின் இலகு கடன் உதவித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.