மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட முத்தரிப்புத்துறை மீனக் கிராமத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு குறித்த கிராமத்திற்குள் புகுந்த கடற்படைச் சிப்பாயை மடக்கிப் பிடித்த மக்கள் அவரை கடுமையாக தாக்கி பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்துள்ள கடற்படையினர் முத்தரிப்புத்துறை கிராமத்தில் ஏராளமான படையினரைக் குவித்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், ரோந்துப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இதேவேளை கடற்படை சிப்பாயை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்த கிராமத்தைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை நாளை காலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மன்னார் நகரிலிருந்து தெற்கே 35 கிலோ மீற்றல் தொலைவில் அமைந்துள்ள முத்தரிப்புத்துறை கிராமத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமைபுகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டு, கிராம மக்களால் கட்டிவைத்து நையப்புடைத்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவத்தினால் கடும் ஆத்திரமடைந்துள்ள கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடிகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், கடற்படைச் சிப்பாய் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கிராமத்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளிலும், காவல்துறையினரும், கடற்படையினரும் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையை தணித்து கிராம மக்களையும், கடற்படையினரையும் சுமுகமான நிலைக்கு கொண்டுவரும் முகமாக முத்தரிப்புத்துறை கிராம பங்குத்தந்தை டெனிகலிஸ்சடர் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், கிராம மீனவர்கள், வட மாகாண சபை உறுப்பினரான சட்டத்தரணி எஸ் பிரிமூஸ் சிறாய்வா உள்ளிட்டவர்களுக்கிடையில் சந்திப்பு ஒன்றும் இன்று இடம்பெற்றது.
என்றுமில்லாதவாறு கடற்கரை முழுவதும் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், கடற்படையினரின் போர் கப்பல்களும் முத்தரிப்புத்துறை கடற்கரைக்கு அருகிலுள்ள கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதனால் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த பதற்ற நிலையைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் இன்று முழுமையாக தவிர்த்துக்கொண்டுள்ளனர்.