புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பான முக்கிய சாட்சியம் ஒன்று தம்மிடம் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் அச் சாட்சியத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய தகவல்களைக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா என்னும் மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இது தொடர்பில் 12 பேரைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்ன்லையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது மன்றில் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரியும் தோண்றியிருந்தார்.
மன்றில் தோண்றிய குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி வித்தியாவின் கொலை தொடர்பான முக்கிய சாட்சியம் ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது.
அச் சாட்சியத்தின் ஊடாக இக் கொலை சம்பவம் தொடர்பாக பல புதிய விடயங்கள் கிடைத்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட பின்னர் அவர்களின் ஆலோசனைப்படி மன்றில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் விசாரணைகளை தொடர்ந்து நடாத்துமாறு கோரிய நீதவான் சந்தேக நபர்கள் 12 பேரையும் எதிர்வரும் மாதம் 13 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.