தமிழக அரசியல் ரஜினிக்கு ஒத்துவராது- கே.எஸ்.அழகிரி

367 0

நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் ஒத்துவராது என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

பள்ளிக்கூடம் அவசியம் என்பதை உணர்ந்து, 5 ஆண்டுகளில் 12,500 பள்ளிக்கூடங்களை காமராஜர் அமைத்து வரலாற்று சாதனை படைத்தவர். இதனால் தான், இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.

இன்று பல கட்சிகள் சமூக நீதி பற்றி பேசுகிறது. ஆனால், அதனை தொடங்கியவர் காமராஜர் தான். 5 ஆயிரம் ஆண்டுகளாக ஒரு சமுதாயம் கீழேயும், ஒரு சமுதாயம் மேலேயும் இருப்பதை எண்ணி, சமநிலை பெற இடஒதுக்கீட்டை வழங்க நேருவிடம் கூறியவர் காமராஜர். அப்போது, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தினர்.

இப்போதைய ஆட்சியாளர்கள், இந்தியில், ஆங்கிலத்தில் தான் தேர்வு என நிர்பந்திக்கின்றனர். தாய்மொழில் தேர்வு எழுதுவதே முழுமையாக அமையும். கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரியாதவர்கள் வந்து கலாசார படையெடுப்பை நிகழ்த்தியுள்ளனர்.

தமிழகத்துக்கான மத்திய அரசின் 10,500 வேலை வாய்ப்புகளில், தமிழ் தெரிந்தவர்கள் 561 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இந்தியா, இந்தி பேசும் 5 மாநிலத்தவர்களுக்கானது மட்டுமில்லை.

அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையை கடைபிடித்தால் பேராபத்தில் முடியும். ரெயில்வே துறையை தனியார் மயமாக்க, பிரதமர் மோடி முயல்கிறார். உலகளாவிய ஒப்பந்தத்தை கோர உள்ளனர். இளைஞர்கள் இதனை எதிர்த்துப் போராட வேண்டும்.
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினி ஆதரவு யாருக்கு என, தேவையின்றி பேசி வருகின்றனர். சினிமா வேறு. அரசியல் வேறு. நானும் ரஜினி ரசிகன்தான். அவரை ஏற்க முடியாது. ரஜினிக்கு தமிழக அரசியல் ஒத்துவராது. அவருக்கு தெரிந்ததை மட்டும் அவர் செய்தால், அவருக்கு நல்லது.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு முன்னேற்பாடு செய்யவில்லை. தமிழக மக்களை நாம் அரசியல் ரீதியாக ஒன்று திரட்ட வேண்டும். அதற்கு முன்னோட்டமாக மாவட்டத்துக்கு ஒரு குளத்தை சீரமைக்க வேண்டும். நம்பிக்கையோடு உழைத்தால் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.