தமிழகம், புதுவையில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு இல்லை – மத்திய மந்திரி தகவல்

331 0

நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம்

இதுதொடர்பாக எம்.பி.க்கள் வைத்திலிங்கம், ஆ.ராசா, செல்வராஜ், மாணிக்கம்தாகூர், ராஜேஷ் பாய் நரன்பாய் சவுடாஸமா ஆகியோர் எழுப்பி இருந்த கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நி‌ஷங்க் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறி இருப்பதாவது:-

மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் மருத்துவக் கல்வி வருகிறது. இளநிலை, முதுகலை, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி இரு மாநில அரசுகளிடம் இருந்து அமைச்சகத்துக்கு கோரிக்கை வந்துள்ளது.

எனினும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956.10டி பிரிவானது மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு பரிந்துரைக்கிறது. இச்சட்டத்தின் பிரிவுகள் மாநிலங்களுக்கு விலக்கும், தளர்வும் இன்றி நாடு முழுவதும் பொருந்துகிறது.

நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதே வேளையில் கூட்டு நுழைவுத்தேர்வு (பிரதானம்) ஆண்டுக்கு ஒருமுறை கணினி சார்ந்த தேர்வாக (சி.பி.பி.) நடத்தப்படுகிறது. நீட் தேர்வு மத்திய இடைநிலை கல்வி சி.பி.எஸ்.இ. மூலம் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டது.

நீட் தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக எந்தவித தகவலும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.