கடற்படையின் ஆயுதங்கள் வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
எவன்ட் கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் கையளிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை கடற்படையின் கீழ்நிலை அதிகாரிகள் சிலர், 800 ஆயுதங்களை 5000 டொலருக்கு வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக எவன்காட் நிறுவனத்தின் தலைவரான மேஜர் நிசங்க சேனாதிபதி குற்றம்சாட்டியிருந்தார்.
“இலங்கை கடற்படையில் ஆயுதங்களைக் கையாளும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள கீழ் நிலை அதிகாரிகள் பலர், இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆயுதங்களுடன் வெளிநாட்டவர்கள் நுழைவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். இந்த ஆயுதங்கள் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளான ஐ.எஸ், அல்கைதாவிடம், செல்லக் கூடும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கருத்து வெளியிடுகையில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, விசாரணைகளை நடத்துமாறு தான் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை கடற்படைத் தளபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன் உண்மைத்தன்மை தொடர்பாக விசாரணை நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளேன். எனினும், இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பதற்கு சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கடற்படையினர் ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்திருப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது.
அது உண்மையாயின் அப்போதைய கடற்படைத் தளபதி அதுபற்றி அறிந்திருப்பார். விசாரணைகளில் எல்லாம் தெரிய வரும்” என்றும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
அதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கடற்படைத் தளபதி லெப்.கொமாண்டர் இசுறு சூரியபண்டாரவிடம் கேள்வி எழுப்பியபோது, நிசங்க சேனாதிபதி ஊடகங்களிடம் கூறியதற்குப் பதிலாக இந்தக் குற்றச்சாட்டுகளை சரியான அதிகாரிகளிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
”எந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும், சரியான அமைப்பிடம் அதனை பதிவு செய்திருக்க வேண்டும். காவல்துறையில், ஊழல் மற்றும் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில், அல்லது பாதுகாப்பு அமைச்சில் அவர் முறைப்பாடு செய்திருக்கலாம். அவர் இதனை ஊடகங்களிடம் தான் கூறியிருக்கிறார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று கூறுகின்ற அவர், இந்த இரகசியத்தை ஏன் அவர் இவ்வளவு காலமும் மறைத்து வைத்திருந்தார்? உடனடியாகவே ஏன் அதனை அவர் வெளிப்படுத்தவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.