சுகாதார அமைச்சினுள் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் எனவும், அதன் மூலமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த கோரிக்கையை முன்வைத்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் அளுத்கே தொடர்ந்து கூறியதாவது,
அமைச்சர் ராஜிதசேனாரத்னவினால் சுகாதார அமைச்சினுள் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் 12 அமைப்பினருக்கு முறைப்பாடுகளை அளித்துள்ளோம். அந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையாகும்.
இவ்வாறான குற்றச்செயல்களை புரிந்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைக்க சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.