சன்சீ கப்பல் – நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

339 0

downloadசன்சீ கப்பல் ஊடாக ஈழ அகதிகளை கனடாவுக்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு விசாரணை செய்யப்படவுள்ளது.

வன்குவார் மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளதாக கனடாவின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு ஜுலை மாதம் 493 அகதிகளுடன் குறித்த கப்பல் கனடா சென்றது.

அவர்களில் ஒருவர் கடல் பயணித்தின் போதே உயிரிழந்த நிலையில், அவரது சடலம் கடலில் எறியப்பட்டது.

இது தொடர்பில் லெஸ்லி எமானுவேல், குணாரொபின்சன் கிறிஸ்துராஜா, நாகராஜா மஹேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவர்கள் மீதான விசாரணை, நேற்று வன்கூவர் மேல் நீதிமன்றத்தின் 12 அறங்கூறுனர்கள் முன்னிலையில் ஆரம்பமானது.

இதன்போது அரச தரப்பு சட்டத்தரணி தமது தொகுப்புரையை முன்வைத்தார்.

குறித்த நால்வரும் கப்பலில் பயணித்த அகதிகளிடம் ஆரம்பபணமாக 5 ஆயிரம் டொலர்களையும், கனடாவுக்கு சென்றப் பின்னர் 25 ஆயிரம் டொலர்களை வசூலித்துள்ளனர்.

இலங்கையர் ஒருவர் கனடாவுக்கு பிரவேசிப்பதற்கு, அனுமதிக்கப்பட்ட கடவுச்சீட்டும் வீசாவும் அவசியம் என்ற போதும், சன்சி கப்பலில் பயணித்த 492பேரிடமும் எந்த ஆவணங்களும் இருக்கவில்லை என்று அவர் தமது தொகுப்புரையில் கூறினார்.

குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு விசாரணை செய்யப்படவுள்ளது.