தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள் நிறைவாகின்றன.
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி,பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.
சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் மற்றும் இன்றும் எமது மக்கள் மீது சிங்கள பயங்கரவாத அரசு முன்னெடுக்கும் நிலப்பறிப்பு, ராணுவமயமாக்கல் ,கலாச்சார அழிப்பு எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.
அந்த வகையில் யேர்மனியில் பல நகரங்களில் 1983 ஆம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில்,சிறிலங்கா அரசபடைகளால் கொல்லப்பட்ட 300,000 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருவோம்.
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி