மட்டக்களப்பு சிறைச்சாலையில் எந்த நபருக்கும் தனிப்பட்ட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என் .பிரபாகரன் தெரிவித்தார்.
உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு “ மனிதகுலத்தின் பெருமையை மதிக்கும் ஒரு சமூகம் “ எனும் தொனிப்பொருளில் ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது
மட்டக்களப்பு குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் இன்று மட்டக்களப்பு கோப் இன் விடுதி கேட்போர் கூடத்தில் குடும்ப புனர்வாழ்வு நிலைய பிராந்திய திட்ட இயக்குனர் எஸ் . சதிஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது .
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சிறைச்சாலைகள்,பொலிஸ் நிலையங்கள்,படைமுகாம்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் சிறைச்சாலையினைப் பொறுத்தவரையில் அங்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அங்கு சித்திரவதைகள் நடைபெறுவதில்லை.
பல குற்றங்களை செய்தவர்கள் அங்குவரும்போது அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் சில நடைமுறைகள் பின்னபற்றப்படுகின்றன.அவை சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நடைபெற்றுவருகின்றன.
குற்றங்களை இழைத்து தண்டனைபெற்றுவரும் ஒருவர் மீண்டும் சமூகத்திற்குள் செல்லும்போது அவரை சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலையினை ஏற்படுத்தவேண்டும்.அதற்கான தயார்படுத்தல்களை சிறைச்சாலைகளில் மேற்கொண்டுவருகின்றோம்.
சிறைச்சாலையில் தொழில்பேட்டைகள் அமைக்கப்பட்டு தொழில்கள் வழங்கப்படுகின்றன.தொழி;பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.தண்டனைக்காலம் முடிந்து வீடு செல்லும்போது வங்கியில் பண வைப்புடன் வீடு செல்கின்றனர்.
இன்று சிறைச்சாலைகளில் உள்ள மரண தண்டனைக்கைதிகள் கூட வீடுகளுக்கு சென்று உறவினர்களுடன் உறவாடும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் என்பவருக்கு குளிரூட்டப்பட்ட அறை வழங்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்துவருகி;னறனர்.
ஆனால் அவருக்கு அங்கு எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.சாதாரண கைதிகளுடன் 11பேருடனையே ஒரு அறையில் அவர் இருந்துவருகின்றார்.அவருக்கு எந்தவித பிரத்தியேக வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.அண்மையில் நீதிவான் நீதமன்ற நீதிபதியும் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அதனை அவதானித்தார்.
ஆனால் அவருக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கமுடியும்.அதற்கான சட்டம் இருக்கின்றது.ஆனால் அவர் எந்த வசதியையும் சிறைச்சாலையிடம் கோரவில்லை.கைதிகள் அனைவருமே சமமாகவே நோக்கப்படுகின்றனர் என்றார்.