இஸ்லாம் மதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக ஏனைய மத மக்கள் மத்தியில் திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இது தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் கவனத்தில் எடுத்து இதற்கான தீர்வொன்றை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை இஸ்லாம் புத்திஜீவிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து அகில இலங்கை இஸ்லாம் புத்தி ஜீவிகள் சங்கத்தினர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது அகில இலங்கை முஸ்லிம் புத்தி ஜீவிகள் சங்கத்தின் ஊடக செயலாளரினால் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் மகாநாயக்க தேரரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் தெரிவிக்கையில், இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் அல்ல என்று நீங்கள் குறிப்பிடுபவர்களுக்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து இஸ்லாம் புத்திஜீவிகள் சங்க பிரதிநிதிகளிடம் கேள்வியெழுப்பினார்.
அத்தோடு, இஸ்லாமிய கல்வி முறைமைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து நீங்கள் கவனம் செலுத்தவில்லையா என்றும் மகாநாயக்க தேரர் அவர்களிடம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கையில் , அந்த விடயங்கள் கல்வி அமைச்சுக்கு கீழேயே காணப்படுகின்றன என்று குறிப்பிட்டார்கள்.
எனினும் மதம் சார்ந்த விடயங்களில் சமய புத்தகங்களில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நாம் அவதானம் செலுத்துவோம். எனவே நீங்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது நல்லது என்பதே எமது நிலைப்பாடு என்று மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.