வாக்கெடுப்புக்கு முன்னர் மஹிந்தவை சந்தித்த ரணில் -அநுரகுமார

300 0

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால் இருவரும் தவறிழைத்துவிட்டனர்.

இலஞ்ச அரசியல் ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான ஆதரவை அரசாங்கம் திரட்டியது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில்  நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

1949இல் இருந்து இன்றுவரை அரசாங்கங்களுக்கு எதிராக 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுவும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும்” என தெரிவித்துள்ளார்.