உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன.
இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே அதற்கு முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அதற்கு மறுநாள் 26-ந் தேதி தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், “எஸ்.டி. பிரிவு மக்களுக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கவில்லை. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு வார்டு கூட எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்படவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அந்த தேர்தலை ரத்து செய்து கடந்த 4-ந் தேதி இடைக்கால தீர்ப்பு வழங்கினார். மேலும், புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 6-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிய இன்னும் 4 நாட்களே இருப்பதால், அவற்றுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பிறப்பித்து உள்ளார்.
‘தமிழ்நாடு ஊராட்சிகள் 3-வது திருத்த அவசர சட்டம் 2016’ என்ற பெயரில் பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த அவசர சட்டத்தின்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, கிராம ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக பொறுப்பை கவனிக்க தனி அதிகாரிகளை அரசு நியமிக்கும் என்று அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது..
புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் நாள் அல்லது டிசம்பர் 31-ந் தேதி ஆகிய இந்த இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை தனி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் இருப்பார்கள் என்றும் அந்த அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.