தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டியூர் கிராமத்தில் நீர் பற்றாக்குறை காரணமாக, நாற்றங்காலுக்கு தேவையான நீரை டேங் லொறி மூலம் விலை கொடுத்து வாங்கி வயலுக்குப் பாய்ச்சி வருகிறார் விவசாயி.
கண்டியூர் உள்ளிட்ட கிராமங்கள் குடமுருட்டி ஆறு மூலம் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில், மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணை செப். 24ஆம் திகதி திறக்கப்பட்டது. அப்போது குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் வந்தது.
இதை நம்பி கண்டியூர் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயி கிருஷ்ணன் 4 மூட்டைகளில் விதை நெல்லை வாங்கி விதைப்பு செய்தார். அதன் பிறகு தண்ணீர் வரவில்லை. அப்பகுதியில் மழையும் இல்லாததால் நாற்றங்கால்கள் காயத் தொடங்கின.
சற்று தொலைவில் ஆழ்குழாய் மோட்டார் பம்ப்செட் இருந்தாலும், நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டதால் தண்ணீர் பெற வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.
எனவே 6,000 லீட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங் லொறி தண்ணீர் ரூ. 2,000 வீதம் 5 டேங்கர் லொறி தண்ணீரை ரூ. 10,000-க்கு வாங்கி நாற்றங்காலுக்குப் பாய்ச்சி வருகிறேன். தற்போது கடுமையான வெயில் நிலவுவதால், நாற்றங்காலுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லாவிட்டால் நாற்றங்கால்கள் காய்ந்துவிடும். எனவே டேங் லொறி மூலம் தண்ணீர் வாங்கி பாய்ச்சி வருகிறேன் என்றார் கிருஸ்ணன்.
இந்த நிலையை அறிந்தும், பசியால் துடிப்பவனையும், புளித்த ஏப்பக்காரனையும் சமமாகப் பாவிப்பது போல், தமிழகத்தின் தவிப்பையும், கர்நாடகத்தின் வஞ்சகத்தையும் காவிரி உண்மை அறியும் குழு ஒன்றாகப் பாவித்து அறிக்கை அளித்துள்ளது இதைவிட பெரும் கொடுமை என அறிவிக்கப்படுகிறது.