ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகள் ஐதராபாத் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் துறை ரீதியாக இரண்டு மாநிலத்துக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன்படி இந்து அறநிலையத்துறை சார்பில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் இரு மாநிலங்களுக்கும் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கானாவுக்கு ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்று ஐதராபாத் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஐதராபாத்தில் உள்ள சிலுகுரி பாலாஜி வெங்கடேஸ்வரா கோவில் பரம்பரை அர்ச்சகரும், அறங்காவலருமான எம்.வி. சௌந்தர்ராஜன் என்பவர் தொடர்ந்து உள்ளார்.
திருப்பதி கோவில் தேவஸ்தானம் சார்பில் தெலுங்கானா மாநிலத்துக்கு நிர்வாக நிதிக்கு ரூ. 382.87 கோடி, பொது நிதி திட்டத்துக்கு 188.61 கோடி ஆகிய தொகைகள் ஒதுக்கப்படாமல் உள்ளது.
மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில் 1987-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை கணக்கிட்டு திருப்பதி தேவஸ்தானம் ரூ.1000 கோடியை தெலுங்கானாவுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதுபற்றி 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய ஆந்திரா, தெலுங்கானா அரசுகளுக்கும், திருப்பதி தேவஸ்தானத்துக்கும் உத்தரவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.