தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதாகவும், 3 தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். இதில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட்டது.
தற்போதும் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது. இருப்பினும் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? என்பது குறித்து மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுப்போம். இதனை அகில இந்திய தலைமை முறைப்படி அறிவிக்கும்.
உள்ளாட்சி தேர்தல் என்றால் கூட்டணியை மாநில தலைமை அறிவிக்கும். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் கூட்டணியை அகில இந்திய தலைமை தான் அறிவிக்கும். எனவே இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
ஜனநாயக முறைப்படி தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். பணப்பட்டுவாடாவை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காவிரி பிரச்சினையில் தி.மு.க. – காங்கிரஸ் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்த வேண்டும். அவர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகா தண்ணீர் வழங்க வலியுறுத்த வேண்டும்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அவர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை யாரும் எப்போது வேண்டும் என்றாலும் சந்தித்து பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.