புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் முறைமை மாற்றத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் பரந்து வாழும் இந்திய வம்சாவழி மலையக மக்களின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிடத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் மலையக மக்களுக்கான அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய வம்சாவழி மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை தேசிய தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் நடைபெற்றது.
ஒருமணிநேரமாக இடம்பெற்ற இந்தச்சந்தப்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பாரர்ளுமன்ற உறுப்பினர் திலகராஜ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளர் லோரன்ஸ், மேல்மாகாண சபை உறுப்பினர்களான சண்.குகவரதன், குரசாமி, உட்பட அமைச்சின் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுடான சந்திப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்திருந்தது.
இச் சந்திப்பின்போது, இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களைப் போன்று இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மலையக மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நாட்டில் உள்ள 32 இலட்சம் தமிழ் மக்களிலே 16 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்கள். ஆகவே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப்போன்று வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கூடிய அக்கறை செலுத்துங்கள் என எடுத்துக்கூறியிருகின்றோம்.
தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கத்திலே நாம் சந்திக்கின்ற மிகப்பெரும் சவாலான தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அவரிடத்தில் எமது நியாயமான ஆதங்கத்தையும் எதிர்பார்ப்பையும் எடுத்துக்கூறியுள்ளோம்.
இந்த நாட்டைப்பொறுத்தவரையில் சிங்கள மக்கள், வடக்குகிழக்கு தமிழ் மக்கள் ஆகியோரைப் போலல்லாது மலையக மக்களும், முஸ்லிம் மக்களும் தான் சிதறிவாழ்பவர்களாக காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் தான் சிதறிவாழும் அந்த மக்களுக்கான பிரதிநிதித்துவங்களை தெரிவு செய்வதற்கான தொகுதி முறைமையை அமைத்துக்கொள்ள முடியாத நிலைமையில் திண்டாடிக்கொண்டிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு மேலதிக ஆசனங்களை ஒதுக்குதல், வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு அங்கு பிரதிநிதித்துவத்தை குறையாதிருப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பாக யோசனைகள் முன்வைக்கப்பட்டு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அத்தகைய நிலையில் தான் சிதறிவாழும் மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநித்துவங்களை உறுதி செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு யோசனைகளை அரசாங்கத்திடத்தில் முன்வைத்துள்ளோம்.
அவ்வாறிருக்கையில் சிறுபான்மையினங்களின் விவகாரங்களை கையாள்பவர் என்ற ரீதியில் நீங்கள அது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
மலையக மக்களுக்கும் அதிகாரப்பகிர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தலைச் செய்துள்ளோம். முலையக மக்கள் கோரும் அதிகாரப்பகிர்வு என்பது வடக்கு கிழக்கில் கோரப்படும் அதிகாரப்பகிர்வை ஒத்தது அல்ல.
மலையக மக்கள் பெரும்பாலும் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றார்கள். ஆகவே அதனடிப்படையிலேயே தான் எமது அதிகாரப்பகிர்வு தொடர்பாக கோரிக்கைகள் அமைந்திருக்கின்றன.