இந்திய மாக்கடலின் பாதுகாப்பு பூகோள பொருளாதாரத்தை உறுதித்தன்மையுடன் வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா, சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகள் சுதந்திரமான கப்பல் நடமாட்டம் போன்ற அனைத்துலக நெறிமுறைகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு கரையோர ஒத்துழைப்பில் ஈடுபடவேண்டிய தேவையின் முக்கியத்துவம் தொடர்பாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
‘இந்திய மாக்கடலின் கடல்சார் பாதுகாப்பானது, இந்தியா, சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்துச் செயற்படும் திறனிலும் அமெரிக்கா போன்ற பங்காளி நாடுகள் சுதந்திரமான கப்பற் பாதைகள் போன்ற அனைத்துலக கடல்சார் நெறிமுறைகளுக்கு ஆதரவு வழங்குவதிலும் தங்கியுள்ளது’ என தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் மான்பிரீத் சிங் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிடப்பட்ட நாடுகள் கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுவதற்காக எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுகின்றன என்பதிலேயே இந்த நாடுகளின் உள்நாட்டு உறுதித்தன்மை தங்கியுள்ளது என மான்பிரீத் சிங் ஆனந்த் தெரிவித்தார்.
உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு உழைக்கும் மக்களை அதிகம் கொண்டுள்ள தென்னாசிய நாடுகள் தமது நாட்டின் பொருளாதாரத்தை சராசரி ஏழு சதவீதத்திற்கும் அதிகமாக மாற்றுமளவிற்கு மிகப்பாரிய பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளன என அமெரிக்கப் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் மேலும் குறிப்பிட்டார்.
‘இவ்வாறானதொரு பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு இந்திய மாக்கடலின் பாதுகாப்பானது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் ‘ என மான்பிரீத் சிங் ஆனந்த் குறிப்பிட்டார்.
அடுத்த 15 ஆண்டுகளில் 250 மில்லியனுக்கும் மேற்பட்ட தென்னாசியர்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து செல்வார்கள் என்பதால் கட்டுமானம் மற்றும் சேவைகளுக்கான பலமான கேள்விகள் உருவாக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான கட்டுமான முதலீட்டிற்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட 2.5 ரில்லியன் டொலர் வரை தென்னாசியாவிற்குத் தேவைப்படும் எனவும் இதன்மூலம் இது முழுமையான பொருளாதார முக்கியத்துவத்தை அடைந்து கொள்ளலாம் எனவும் மான்பிரீத் சிங் ஆனந்த் தெரிவித்தார்.
‘தென்னாசிய நாடுகள் தொடர்ந்தும் உலக நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை அதிகரித்து வரும் அதேவேளையில், தென்னாசியாவானது தற்போதும் மிகக் குறைவான பொருளாதார ஒருங்கிணைப்பைக் கொண்ட உலக நாடுகளில் ஒன்றாக உள்ளது. தென்னாசியாவின் மொத்த வர்த்தகத்தின் ஆறு சதவீதத்திற்கும் குறைவானதும், இதன் முதலீட்டின் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதும் இப்பிராந்தியத்திற்குள்ளேயே இடம்பெறுகின்றன’ என அவர் சுட்டிக்காட்டினார்.
தென்னாசியாவில் செழுமையையும் உறுதித்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுப்பதாகவும் வர்த்தகம் மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பைப் பேணுவதற்கான முயற்சிகள் மட்டுமல்லாது, பலமான சமூக மற்றும் சூழல் சார் ஒத்துழைப்பையும் உருவாக்குவதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதாகவும் மான்பிரீத் சிங் ஆனந்த் தெரிவித்தார்.
‘இந்தியாவுடனான அமெரிக்காவின் இருதரப்பு வர்த்தகமானது தற்போது 100 பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாகவும், இதில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் பெண்கள் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கும் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, நிதி மற்றும் பல்வேறு துறைகளையும் பெண்கள் சமமான வகையில் பெற்றுக் கொள்வதற்குமான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டார்.
வர்த்தகத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவதற்கான நகர்வுகளை தென்னாசியப் பிராந்திய நாடுகள் முன்னெடுத்ததாகவும், சிறிலங்காவுடன் இந்தியா பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான உந்துதலையும் வழங்கி வருவதாக மான்பிரீத் சிங் ஆனந்த் தெரிவித்தார்.
இதேபோன்று இந்தியாவானது பங்களாதேஸ், நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுடனும் பொருளாதார ஒத்துழைப்பைப் பேணுவதால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
‘பங்களாதேஸ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகியன ஒன்றிணைந்து மோட்டார் வாகன உடன்படிக்கை அல்லது BBIN யில் கைச்சாத்திட்டு அமுல்படுத்துவதால் இது தொடர்பில் ஏற்படும் போக்குவரத்துத் தடைகளை இந்த நாடுகளாலும் தவிர்க்க முடிகிறது. இதன்மூம் இந்த நாடுகள் விரைவானதும், மலிவானதுமான கப்பற் போக்குவரத்தைச் செய்வதுடன் பொருட்கள் சேவைகளையும் விரைவாகப் பரிமாற்றிக் கொள்ள முடியும்’ எனவும் அவர் தெரிவித்தார்.