ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற பீரிக்ஸ் மாநாட்டின்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு இராப்போசனம் வழங்கினார். இந்நிகழ்வில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்துப் பேசியிருந்தனர்.
கோவா மாநாட்டுக்கு வந்திருந்த ரஷ்ய அதிபர் புடின் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததால், சிறிலங்கா அதிபருடன் முறைப்படியான இருதரப்பு பேச்சுக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கவில்லை.
எனினும், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடனான 20 நிமிடச் சந்திப்பானது, முறையான இருததரப்பு பேச்சுவார்த்தைகளை விடவும் காத்திரமாக அமைந்தது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சந்திப்பின் போதே விளாடிமிர் புடின் மைத்திரிபால சிறிசேனவை ரஷ்யாவுக்கு பயணம் செய்யுமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மைத்திரிபால சிறிசேன அதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
மைத்திரிபால சிறிசேன பதவியேற்றபின்னர் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போதிலும் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.
அத்துடன் ரஷ்யாவுக்கு நியமிக்கப்பட்ட தூதுவர்களும் ரஷ்யாவுடன் சரியான முறையில் உறவுகளைப் பேணவில்லை. இதனையடுத்து, இந்நிலையில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டால் இருநாட்டு உறவுகளும் வலுப்படும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.