முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது – ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஸாட் கோரிக்கை

277 0

7m8a7964-01புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அவர்களின் அபிலாசைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக்கத்துறை அமைச்சருமான ரிஸாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் அகில இலங்கை மக்மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஸாட் பதியூர்தீன் தலைமையிலான முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் பரஸ்பரம் இணைந்து சுமூகமாக வாழ்கின்ற போதும் அவர்கள் தேர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர்.
கடந்த கால யுத்தத்தில் முஸ்லிம்கள் நேரடியாக சம்பந்தப்படாத போதும் அதனால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

1990ஆம் ஆண்டு வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் துரத்தப்பட்டு இன்னும் அகதி முகாம்களில் வாழும் கொடுமையே நிலவுகின்றது.

இந்தக் காலப்பகுதியில் இவர்கள் வாழ்ந்த பூர்வீக குடியிருப்புக் காணிகள், விவசாயக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சில காணிகள் வர்த்தமானிப் பிரகடனம் மூலம் அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீள்குடியேறுவதற்கு பெருந்தடை நிலவுகின்றது.

சர்வதேசமோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ வடக்கு முஸ்லிம் சமூகத்தை எள்ளளவும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அழுத்தம் கொடுத்துவரும் சர்வதேசம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலோ, அவர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலோ அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களை குடியேற்றுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசினால் உருவாக்கப்பட்ட விசேட செயலணியின் செயற்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயுள்ள வடமாகாண சபை தடை போடுகின்றது.

இந்த மாகாண சபை வடக்கு முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடாத்துகின்றது. அவர்கள் உதவுகின்றார்களுமில்லை, உதவி செய்பவர்களை அனுமதிக்கின்றார்களுமில்லை.

நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எங்களின் மனக்குறைகளையும் கவலைகளையும் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.