திருட்டுக் குற்றச்சாட்டு சுமுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 7 பொலிஸ் அதிகாரிகள் சார்பில் மன்றில் விண்ணப்பிக்கப்பட்ட பிணை அனுமதியனை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.
அத்துடன் சாட்சிகளின் பாதுகாப்பு கருதியியும், சாட்சிகளின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும் சந்தேக நபர்கள் 7 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இவ் சித்திரவதை கொலை சம்பவம் தொடர்பில் நீதி மன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டும் மன்றில் முன்னிலையாகாத மற்றுமொரு பொலிஸ் அதிகாரிக்கான பிடியாணை உத்தரவினையும் நீதிபதி பிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்ட மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வு பிரிவினர் அது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இதன்படி குறித்த நபர் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை யாழ்.மேல் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளுமாறும், அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குறித்த நபரின் சடலம் கிளிநொச்சியில் மீட்கப்பட்டதால், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதன்படி சித்திரவதை வழக்கு நேற்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சித்திரவதை குற்றம் சுமத்தப்பட்ட எதிரிகளான 7 பொலிஸ் அதிகாரிகள் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இருப்பினும் ஒரு எதிரி மன்றில் ஆஜராகவில்லை.
மன்றில் ஆஜராகியிருந்த 7 எதிரிகளுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட குற்றப் பகிர்வு பத்திரம் வழங்கப்பட்டது. அத்துடன் அக் குற்றப் பகிர்வு பத்திரம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வாசித்தும் காட்டப்பட்டது.
இதன் போது எதிரிகள் சார்பில் மன்றில் தோண்றியிருந்த சட்டத்தரணிகள் குற்றப்பகிர்வு பத்திரத்தில் முறைப்பாட்டாளர்களது வாக்குமூலம் மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளது. சான்று பொருட்களின் விபரங்கள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதில் இணைக்கப்படவில்லை. அத்தகவல்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இது தொடர்பில் பதிழலித்த சட்டமா அதிபர் திணைக்களத்தில் பிரதி மன்றாதிபதி குமார்ரட்ணம் இவ் குற்றப் பகிர்வு பத்திரத்தில் சான்று பொருட்கள் தொடர்பாகவும் பிரதி இணைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை சரிவர நன்பர்கள் பரீசிலனை செய்வில்லை எனவும் சுட்டிக்காட்டியதோடு ஒரேயொரு பிரதி மாத்திரம் இணைக்கப்படவில்லை எனவும் அதனை இணைத்து தருவதாகவும் கூறியிருந்தார்.
தொடர்ந்து எதிரிகளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் எதிரிகள் இம் மன்றினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவார்கள். எனவே அவர்களை பிணையில் வெளிச் செல்வதற்கான அனுமதியினை மன்று வழங்க வேண்டும் என்று மன்றில் பிணை விண்ணப்பத்தினை சமர்ப்பித்திருந்தனர்.
மேலும் மூன்றாவது எதிரி சார்பில் மன்றில் பிரசன்னமாயிருந்த சட்டத்தரணி குறித்த நபர் எந்தவிதமான தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடாத ஒழுங்காக கடமை செய்பவர் என்று தெரிவித்து அது தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கிய நற்சான்றிதழ் பத்திரத்தையும் மன்றில் சமர்பித்திருந்தார்.
இதே போன்று எட்டாவது சந்தேகநபர் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி குறித்த நபர் வாகன சாரதியாக மாத்திரமே கடமையாற்றியிருந்ததாகவும் இவர் வழக்கு விசாரனைகளுக்கு பூராண ஒத்துழைப்பு வழங்குவார் எனவும் எனவே அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் மன்றில் கோரியிருந்தார்.
மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டமா அதிபர் திணைக்கள பிரதி மன்றாதிபதி குமாரரட்ணம், குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் பொலிஸ் அதிகாரிகளாக உள்ளார்கள். இவ் வழக்கின் சாட்சிகளான ஒன்று தொடக்கம் 7 வரையானவர்கள் சிவில் சாட்சியாக இருப்பதாலும் இவர்களுக்கு எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே அவர்களுக்கான பிணை அனுமதி வழங்கப்படக் கூடாது என்று மன்றில் கோரியிருந்தார்.
மூன்றாவது சந்தேகநபர் சார்பாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ் தொடர்பாக விசாரனை நடாத்தப்பட வேண்டும். எனவும் ஏழாவது சந்தேக நபருக்கு தனது பொலிஸ் பணியில் இருந்து விலகி வெளிநாடு சென்றிருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவானது அறிக்கையிட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பிக்க வேண்டும் எனவும் மன்றில் கோரியிருந்தார்.
இவை தொடர்பாக பரீசிலனை செய்த நீதிபதி கட்டளை பிறப்பிக்கையில்:-
இரு தரப்பு வாதங்களையும் மன்றானது பரீசிலனை செய்துள்ளது. குறிப்பாக எதிரிகளது பிணை நிராகரிப்பு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாதிபதி குறிப்பிட்ட விடயங்களை மன்று கவனத்தில் கொண்டுள்ளது.
குறிக்கப்பட்ட எதிரிகளில் ஜவருக்கு (1இ2இ4இ5இ6) எதிராக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று எட்டு எதிரிகளுக்கும் எதிராக சித்திரவதை வழக்கானது யாழ்.மேல் நீதிமன்றில் தாக்க செய்யப்பட்டுள்ளது.
இவ் இரு வழக்கிலும் முக்கிய சாட்சிகளாக உள்ள ஒன்று தொடக்கம் 7வரையான சாட்சிகள் சிவில் சாட்சிகளாக உள்ள நிலையிலும் எதிரிகள் அனைவரும் பொலிஸ் அதிகாரிகளாக உள்ள நிலையிலும் சாட்சிகளுக்கு பாதிப்பு அச்சுறுத்தலும் இருக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதனை மன்றானது ஏற்றுக்கொள்கின்றது.
சாட்சிகளுடைய சாட்சிகளானது இன்னமும் பதிவு செய்யப்படாத நிலையில் அவர்களது சாட்சியமானது சுதந்திரமாக பதிவு செய்யப்பட வேண்டியதுடன் சாட்சிகளுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது சட்டத்தின் கடமையாகும். எனவே சாட்சிகளது பாதுகாப்பையும் இவர்கள் சுதந்திரமாக சாடசியமளிக்க வேண்டுய அவசியத்தையும் முன்னிலைப்படுத்தி சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாதிபதியின் வாதத்தை மன்றானது ஏற்றுக்கொண்டு எதிரிகள் சார்பில் அவர்களது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை மன்றானது நிராகரிக்கின்றது.
மேலும சட்டமா அதிபர் திணைக்கள பிரதி மன்றாதிபதி குறிப்பிட்டது போன்று மூன்றாவது எதிரி சார்பாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கியதான நற்சான்றிதழின் பிரதியை சட்டமா அதிபருக்கும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு பணித்துள்ளதுடன் குறித்த நற்சான்றிதழ் தொடர்பாக விசாரனை செய்து அறிக்கையொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிமன்றுக்கும் சமர்பிக்குமாறும் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாருக்கு பணித்திருந்தார்.
அத்துடன் குறிக்கப்பட் வழக்கின் ஏழாவது சந்தேநபருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளதுடன் அதனை குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருடாக நிறைவேற்றவும் எனைய எதிரிகள் ஏழு பேரினையும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.