பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டி 9 ஆவது அகவையாக மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு 450 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுப்போட்டி, இம்முறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் மூன்று தினங்கள் இடம்பெற்றிருந்தது. நேற்று (07.07.2019) ஞாயிற்றுக்கிழமை சார்சல் நகரத்தில் அமைந்துள்ள Centre Sportif Nelson Mandela மைதானத்தில் இறுதிப்போட்டிகள் மிகவும் இடம்பெற்றிருந்தன.
சார்சல் நெல்சன்மண்டேலா மைதானப்பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வு இடம்பெற்றது. ஈகைச்சுடரினை கடந்த 2001 ஆம் ஆண்டு திருகோணமலைக் கடற்பரப்பிலே வீரகாவியமான 2ஆம் லெப். ஆதவன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து பான்ட் தாளவாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. திருமாறன் அவர்கள் ஏற்றிவைத்தார். பிரெஞ்சுக்கொடியை கார்ஜ் சார்சல் பிராங்கோ தமிழ்ச்; சங்க பரப்புரைப்பொறுப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலக்குமாரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 03.11.1990 அன்று மாவிட்டபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை பவிதா அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க மலர்வணக்கத்தை மாவீரர் 2 ஆம் லெப். இளந்தேவன் அவர்களின் சகோதரனும் கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளருமான திரு.டக்ளஸ் அவர்கள் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகக் கொடியை அதன் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புக்கொடியை அதன் செயலாளர் திருமதி அமலகுமார் சுபத்திரா அவர்களும் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து சமநேரத்தில் 6 இல்லங்களுக்கான கொடிகளையும் இல்லங்களின் பொறுப்பாளர்கள் ஏற்றிவைத்தனர்.
ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு மெய்வல்லுநர் போட்டித் தலைவன், தலைவியிடம் கையளிக்க அவர்கள் வீரர்களோடு மைதானத்தை வலம் வந்து இந்த ஆண்டுக்கான மெய்வல்லுநர் போட்டித் தலைவன் கலையழகன் கோசிகன்; மற்றும் மெய்வல்லுநர் தலைவி சோதிராசா சோனா ஆகியோரிடம் ஒலிம்பிக் தீபத்தை ஒப்படைக்க அவர்கள் ஒலிம்பிக் சுடரினை ஏற்றிவைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். தொடர்ந்து நடுவர்களுக்கான சத்தியப் பிரமாணத்தை நடுவர்களில் ஒருவரான திரு.யூட் ரமேஸ் அவர்கள் செய்துவைத்ததைத் தொடர்ந்து போட்டிகள் இனிதே ஆரம்பமாகின.
சோதியா இல்லம் (சிவப்பு), அங்கையற்கண்ணி இல்லம் (நீலம்), ராதா இல்லம் (மஞ்சள்), மாலதி இல்லம் (செம்மஞ்சள்), சார்ள்ஸ் இல்லம் (பச்சை), ஜெயந்தன் இல்லம் (ஊதா)ஆகிய இல்லங்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.
தமிழ்ச்சோலை இல்ல மாணவர்களின் அணிநடை அணிவகுப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அணிவகுப்பு மரியாதையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், தமிழ்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார், மெய்வல்லுநர் போட்டி துணைமுகாமையாளர் திரு.பீலிக்ஸ், ,தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன் கார்ஜ் சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
அணிநடை ஆண்கள் பிரிவில் சோதியா இல்லம் முதலிடத்தையும் ராதா இல்லம் இரண்டாம் இடத்தையும் சாள்ஸ் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
அணிநடை பெண்கள் பிரிவில் சோதியா இல்லம் முதலிடத்தையும் சாள்ஸ் இல்லம் இரண்டாமிடத்தையும் ராதா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இம்முறை இல்ல அலங்காரம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன. இல்ல அலங்காரத்தில் முதலிடத்தை மாலதி (செம்மஞ்சள்) இல்லமும் இரண்டாமிடத்தை அங்கையற்கண்ணி (நீலம்) இல்லமும், மூன்றமிடத்தை முறையே சாள்ஸ் (பச்சை), சோதியா (சிவப்பு) ஆகிய இல்லங்களும் பெற்றுக்கொண்டன.
வினோத உடைப்போட்டி இம்முறை அனைவரையும் சிந்திக்க வைத்ததாக அமைந்திருந்தது. ஆறு இல்லங்களும் வினோத உடைப்போட்டிகளை சிந்தித்து அமைத்திருந்தமை பாராட்டத்தக்க விடயமாக அமைந்திருந்தன. அந்த வகையில் முதலிடத்தை ஜெயந்தன் இல்லத்தைச்சேர்ந்த மீன்களாக வேடமிட்டு வந்த சிறுமியரும், இரண்டாமிடத்தை சோதியா இல்லத்தைச்சேர்ந்த சம்பந்தன் ஐயாவாக வேடமிட்டு வந்த மாணவனும், மூன்றாமிடத்தை சாள்ஸ் இல்லத்தைச் சேர்ந்த உழவர்களாக வந்த மாணவர்களும் பெற்றுக்கொண்டனர். இவர்களோடு ஏனைய இல்லங்களைச்சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட மாணவி (அங்கயற்கண்ணி இல்லம்), சமூக ஊடகங்கள்(ராதா இல்லம்), வயோதிபர்(மாலதி இல்லம்) ஆகியோரும் பாராட்டுக்குரியவர்களாகவே தமது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தனர்.
போட்டிகளின் நிறைவில் மூன்று தினங்களும் நடுவர்களாகக் நடுநிலையோடு கடமைபுரிந்த நடுவர்கள் மைதானத்தின் நடுவே மதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வுகளை திரு.குருபரன், திரு.கிருஸ்ணா, திருமதி கவிதா , திருமதி உதயமாலா, திருமதி இராகினி ஆகியோர் திறம்பட தமது அறிவிப்புக்களின் ஊடாகக் கொண்டுசென்றதைக் காணமுடிந்தது.
அத்தோடு பார்வையாளர்களுக்கான சமநிலை ஓட்டம், சங்கீதக்கதிரை, சிறார்களுக்கான விளையாட்டுக்கள் என்பனவும் சிறப்பாக அமைந்திருந்தன.
முடிவில் 554 புள்ளிகளைப்பெற்று ராதா இல்லம் முதலிடத்தையும் 470.5 புள்ளிகளைப் பெற்று சோதியா இல்லம் இரண்டாமிடத்தையும் 391.5 புள்ளிகளைப்பெற்று சாள்ஸ் இல்லம் மூன் றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன.
நிறைவாக வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கான மற்றும் இல்லங்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.
கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)