மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில் யானை ஒன்று தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாகப் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் குறித்த யானையானது தொப்பிகல குள பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் நடமாடித் திரிந்ததாகவும் தற்போது இறந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற பிரதேசத்திற்குப் பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையை அவ்விடத்திலிருந்து அகற்றுவத்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதேசத்தில் யானை தொல்லை காரணமாக மக்கள் அன்றாடம் தமது இயல்பு வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பிரதேசத்தில் உள்ள நெல் பயிர்கள் சிறுதோட்டப் பயிர்கள் போன்றனவற்றை தமது உணவாக உட் கொண்டு வருவதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள்,பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதிகளில் செல்வதற்கும் அச்சமடைந்த நிலையில் தாம் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த பிரதேசத்தில் ஒரே நாளில் இருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.