5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: விஷேட அறிக்கையை நீதிவானுக்கு சமர்ப்பித்த சி.ஐ.டி.

394 0

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்று, காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த உண்மை நிலைமைகள் மறைக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ உள்ளதாகவும் அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி. கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்திய தகவல்களை மையப்படுத்தி அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளுக்கு ஆஜராக ஜனாதிபதி சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டை நீதிவானுக்கு சி.ஐ.டி. சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் அககப்பட்ட சம்பவங்களை  அப்போதைய தளபதியாக இருந்த அத்மிரால் வசந்த கரண்ணாகொட மிக நன்றாக அறிந்திருந்துள்ளதாகவும் ,  அவரும் உண்மைகளை மறைத்துள்ளதாகவும் சி.ஐ.டி. நீதிவானுக்கு  அறிவித்துள்ளது.

அண்மையில் வசந்த கரன்னகொடவிடம் சி.ஐ.டி. முன்னெடுத்த தொடர் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவும், கிழக்கு முன்னாள் கடற்படை கட்டளைத் தளபதி ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் துஷித் வீரசேகர,  ரியர் அத்மிரால் ஆனந்த குருகே, கொமாண்டர் பண்டார, கொமாண்டர் சேனக ஹங்வெல்ல மற்றும் கொமாண்டர் ஜே.ஜே. ரணசிங்க உள்ளிட்டோரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிபப்டுத்தப்பட்டுள்ள முக்கிய சாட்சியங்களின் பிரகாரமும் இந்த விஷேட அறிக்கையை சி.ஐ.டி.  நீதிவானுக்கு சமர்ப்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசந்த சில்வவாவின் கையொப்பத்துடன் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.