விக்கி – கஜேந்திரகுமார் கூட்டணியமைப்பதில் சிக்கல்?

380 0

புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் புதிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுரேஷ் பிரேமச்சந்திரனை தவிர்த்து விக்னேஸ்வரன் மாத்திரம் தமது தரப்புடன் இணைய வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதற்கு நிபந்தனை விதித்து வந்தது.

பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த தரப்பினர், சுரேஷ் பிரேமச்சந்திரனை விட்டு விக்னேஸ்வரன் வர தயாராக இருக்கிறார், தற்போது சுரேஷ் தரப்புடன் அவருக்கு கருத்து வேறுபாடுள்ளது என தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதையடுத்து இன்று(திங்கட்கிழமை) இரண்டு தரப்பும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்;டிருந்தன. நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடைபெறவிருந்ததாக கூறப்படுகின்றது.

சி.வி.விக்னேஸ்வரன், க.அருந்தவபாலன், பேராசிரியர் வி.சிவநாதன் ஆகியோர் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கலந்துகொள்ளவிருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சட்டத்தரணிகள் சுகாஷ், காண்டீபன், மணிவண்ணன் ஆகியோர் முன்னணி சார்பிலும் கலந்துகொள்ளவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சுரேஷ் தரப்பை தவிர்த்து கூட்டணியமைக்க தயாரில்லையென்ற நிலைப்பாட்டை மத்தியஸ்தர்களிடம் விக்னேஸ்வரன் நேற்று மாலை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

சுரேஷ் தரப்பையும் இணைத்தால் கூட்டணிக்கு தயாரில்லையென முன்னணி விடாப்பிடியாக இருந்தது. இதையடுத்து இன்றைய சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.