வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை

477 0

வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 70 பவுண் நகைகளையும் , 10 இலட்ச ரூபாய் பணத்தினையும் திருடி சென்றுள்ளனர்.

வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்றுமுன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குடும்பம் ஒன்று துன்னாலை பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு குறித்த வீட்டின் பின் பக்க ஜன்னல் கம்பிகளை அறுத்து அதனூடாக உள் நுழைந்த திருடர்கள் வீட்டில் தூக்கத்தில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்து அவர்களை மயக்கி விட்டு வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்தி , வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்களின் நகைகள் உட்பட வீட்டில் இருந்த 70 பவுண் நகைகளையும் , சுமார் 10 இலட்ச ரூபாய் பணத்தினையும் திருடிக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் குறித்து வீட்டில் இருந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையிலையே அறிந்துள்ளனர். அது குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த வீட்டிற்கு பொலிசார் ,  தடயவியல் பொலிசார் மற்றும் மோப்ப நாய் சகிதம் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர்.

வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் கையுறைகளை பயன்படுத்தி திருட்டில் ஈட்டுபட்டமையால் , திருடர்களின் கை ரேகைகளை தம்மால் பெற முடியவில்லை எனவும் , ஏனைய தடயங்களை பெர்ருக்கொண்டுள்ளதாகவும் , அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.