தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு 24 மணி நேரத்தில் 8 பேர் சுட்டுக்கொலை

572 0

தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் நீண்ட காலமாக பல்வேறு ரவுடி கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த கும்பல்களின் வன்முறையில் ஆண்டுதோறும் பலர் கொல்லப்படுகின்றனர். இந்த கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ராணுவத்தை அனுப்புமாறு அரசுக்கு உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த ஆண்டு அங்கு ரவுடி கும்பல் வன்முறையை ஒடுக்குவதற்கு அதிபர் சிரில் ராமபோசா கும்பல் வன்முறை தடுப்பு போலீஸ் பிரிவை தொடங்கினார். ஆனாலும் கும்பல் வன்முறை அங்கு முடிவுக்கு வந்தபாடில்லை.

இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்த கும்பல்களால் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 6 பேர் பெண்கள். அவர்கள் 18 முதல் 26 வயது வரையிலானவர்கள்.

இந்த வன்முறையின் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை. 8 பேர் பலிக்கு காரணமான ரவுடி கும்பல்களை தேடும் வேட்டையை போலீஸ் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வன்முறையால் கேப்டவுனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.