இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்து விட்டார்.
இதனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்கிறது.
புதிய பிரதமருக்கான போட்டியில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவரை (புதிய பிரதமரை) தேர்ந்தெடுப்பதற்காக 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டுகள் போய்ச்சேர தொடங்கி உள்ளன. இந்த வாக்குச்சீட்டுகளில் அவர்கள் வாக்களித்து, திருப்பி அனுப்பி வைக்க வரும் 22-ந் தேதி வரை அவகாசம் உள்ளது. 23-ந் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்பட்டு விடும். உடனடியாக பிரதமர் தெரசா மே, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார். உடனடியாக புதிய பிரதமர் பதவி ஏற்பார்.
இந்த நிலையில் ‘டைம்ஸ்’ நாளிதழ் சார்பில் கன்சர்வேடிவ் கட்சியினர் மத்தியில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. இதில், போரிஸ் ஜான்சனுக்கு 74 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. 26 சதவீதம்பேர் மட்டுமே ஜெராமி ஹண்டுக்கு ஆதரவாக உள்ளனர்.
இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.