தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது, மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதிவரியை உயர்த்தியது ஏன்? என்ற கேள்விக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களை பாதிக்காது என்று நினைக்கிறீர்களா?
பதில்: ஒரு விஷயத்தை, மக்களுக்கு, சொல்ல விரும்புகிறேன். எப்போது விலைவாசி உயர்கிறதோ, ஒரு பொருள், பண்டம் மீது உயர்த்தினால் கூட, அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். இல்லை என்று சொல்லவில்லை. யோசிக்காமல் இதை செய்வதில்லை.
இன்றைய தேதியில், வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் எண்ணெய் எவ்வளவு என்று நாம் யோசிக்க வேண்டும். எத்தனையோ விதத்தில், பல விதங்களிலும் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில், மக்கள் நலனுக்கு செலவு செய்யாமல், பெட்ரோலுக்காக வெளிநாட்டுக்கு பணம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
இப்படி இருக்கும்போது, சூரிய சக்தி மூலமாக, மின்சாரம் மூலமாக, பல விதமாக நாம், பொது போக்குவரத்தை மாற்ற வேண்டும். பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பொது போக்குவரத்துக்கு மாற வேண்டும். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம். பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், அதற்கு எங்கிருந்து பணம் வரும்? எல்லா ஊர்களுக்கும் மெட்ரோ வேண்டும். மெட்ரோ ரெயில் வந்த பிறகு, பொதுமக்கள் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி துன்பப்படாமல், தரமான ஒரு சேவையை அளித்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். இந்த கஷ்டத்தை பொறுத்துக் கொண்டால் அந்த மகிழ்ச்சி வரும்.
கேள்வி: தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகப்படுத்தியதால் நகை வியாபாரிகளுக்கு மந்திரி மேல் கொஞ்சம் வருத்தம் என்கிறார்கள். அவர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?
பதில்: நகை வியாபாரிகள், ஒரு வேளை, தங்கத்தை இறக்குமதி செய்து, அதை நகைகளாக தயார் செய்யும் போது, அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும், ஊதியம் கிடைக்கும், அவர்களின் குடும்பங்கள் வாழும். எனவே இந்த தொழில் வளர வேண்டும். இந்த தொழில் மூலமாக உற்பத்தியாகக் கூடிய நகைகளை, ஏற்றுமதி செய்தால், நாட்டுக்கும் அன்னிய செலாவணி கிடைக்கும்.
ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, உள்நாட்டில் தங்க நகைகளை செய்து, விற்கிறீர்கள் என்றால் மீண்டும் அதே பிரச்சினைதான். தங்கத்தை ஒரு முதலீடாக பயன்படுத்துகிறோம். வங்கிகளில் போடுவதற்கு பதிலாக, தங்கமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம், எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் என்று. இதனால் அன்னிய செலாவணி வெளியே போகிறது. தங்கம் சேமிப்புக்கு ஒரு விதம் என்று இல்லாமல், எத்தனையோ வேறு விதங்கள் இன்றுள்ளன.
அதனால், தங்கம் இறக்குமதி, நம் நாட்டு பயன்பாட்டுக்கு, அவ்வளவு தேவையா எனக்கருதி, இறக்குமதி மேல் வரி விதித்திருக்கிறோம். இதனால் நகை வாங்கக்கூடாது என்று அர்த்தமல்ல. ஆனால் அந்த பொருள் நம் நாட்டில் இல்லாத நிலையில், வெளிநாட்டில் இருந்து வரவழைத்தாவது, அதை வாங்கியே தீருவேன் என்றால், கொஞ்சம் வரியையும் கொடுங்கள் என்கிறோம்.
கேள்வி: அனைவரும் ஆச்சரியமாக பார்க்கும் வகையில் அரசு அமைந்து உள்ளது. நிதி-மந்திரியாக உள்ளர்கள். ஆனால், தமிழகத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே?
பதில்: இன்னும் அதிகமாக முயற்சி எடுக்க வேண்டும் என்பது தான் தோல்வியில் இருந்து கிடைத்துள்ள படிப்பினை. தமிழ்நாட்டில் உள்ள பா.ஜனதா கட்சியினர் கடந்த 4, 5 ஆண்டுகளாக நல்ல முயற்சி செய்து கொண்டு தான் வருகின்றனர். ஜன சங்கம் காலத்தில் இருந்தே, பா.ஜனதாவுக்கும், ஜன சங்கத்துக்கும் நல்ல அடித்தளம் இருந்தது. மக்களுக்காக செய்யக்கூடியவை இன்னும் நிறைய இருக்கிறது என்பது தான் தோல்வியில் இருந்து கிடைத்துள்ள பாடம்.
கேள்வி: பா.ஜனதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் எதிராக பேசினால், தமிழகத்தில் வாக்கு அதிகம் கிடைக்கும் என அரசியல் செய்பவர்களின் மனதில் ஒரு எண்ணம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: நாடு முழுவதும் இன்று இளைஞர்களும், பெண்களும் வெளியில் வந்து, மோடிக்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. புரிகிறது. ஆனால் அது மோடி எதிர்ப்பலை என்பது சரியல்ல. வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றையும் நாம் அலசி ஆராய்ந்து தான் பேச முடியும். மோடி எதிர்ப்பு அலை என்பதை நான் ஏற்கவில்லை.
தமிழ்நாட்டில் ரொம்பவே தண்ணீர் பற்றாக்குறை. அந்த பற்றாக்குறையை நீக்குவதற்கான திட்டங்களையும் உருவாக்கி வருகிறோம். அதன் மூலம் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். அதை தமிழ்நாட்டுக்கு ஒரு செய்தியாக நான் கொடுக்க வேண்டும். அதை தவிர இளைஞர்கள் பலரும் புதிய தொழில் (ஸ்டார்ட் அப்) தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு ஏராளமான வரிவிலக்கு அளித்து இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு தேவையான அம்சங்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு நிர்மலா சீதா ராமன் பதில் அளித்தார்.