சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம் பெறவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள காணி சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாளை பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இன்று காலை சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் இடம் பெறவுள்ளது. காணி சிறப்பு ஏற்பாடு சட்டம் தொடர்பில் இதுவரையில் நீதிமன்றில் பல மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த சட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இடம்பெறுவது பொருத்தமற்றது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கான உரிய காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. நாளை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் ஒரு சில விடயங்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினமும் அதற்கு அடுத்த நாளும், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலும் எதிர்த்தரப்பினர் கருத்துக்களை இதன்போது தெரிவிப்போம் என்றார்.