சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போர்க் குற்ற விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் அமெரிக்காவின் உயர் மட்டக் குழுவிடம் வலியுறுத்திய விக்கி
“போர்க் குற்றங்கள் குறித்த பாராபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும் என்பதாலேயே அரசாங்கம் கால அவகாசத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றது” எனக் குற்றஞ்சாட்டிய, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன், “அதனால், போர்க் குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) கொண்டு செல்ல வேண்டியது கட்டாயமாகும்” எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.
அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் உயர் அதிகாரிகள் குழு ஒன்று விக்கினேஸ்வரனை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அமெரிக்க செனட் வெளிவிவகாரக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான டாமியன் எப் மேர்பி, செனட் வெளிவிவகாரக் குழுவின் உறுப்பினரான யெல்டா கஸிமி, அமெரிக்க தூதரக அரசியல் பிரிவு பிரதிப் பிரதம அதிகாரி மார்க்கஸ் பி. பார்ப்பென்டர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்.
யாழ் நகரிலுள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றில் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை, வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது குறித்தும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான நிலைமைகள் உட்பட பொதுவான அரசியல் நிலைமைகள் குறித்து விக்கினேஸ்வரனின் கருத்துக்களை அமெரிக்க அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டார்கள். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு அரசியல் தலைவர்களையும், முக்கியஸ்த்தர்களையும் சந்தித்துப் பேசிய அமெரிக்க குழுவினர் இறுதியாக விக்கினேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார்கள்.
இந்தச் சந்திப்பு குறித்து முன்னாள் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தெரிவித்தவை வருமாறு ;
“இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தை எடுத்துக்கொள்வது ஐ.நா. பிரேரணையிலுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக அல்ல என்பதை நான் அமெரிக்க பிரதிநிதிகளுக்குச் சுட்டிக்காட்டினேன். சிங்கள போர்க் குற்றவாளிகளை அரசாங்கம் தம்மவர்களாகவே பார்க்கின்றார்கள். அவர்களை குற்றவாளிகளாகப் பார்ப்பதில்லை. அதேவேளையில், எமது விடுதலைப் போராளிகளை அவர்கள் தம்மவர்களாகப் பார்ப்பதில்லை. குற்றவாளிகளாகவே பார்க்கின்றார்கள். எமது அன்புக்குரியவர்களை குறிப்பிட்ட ஒரு இடத்தில் குறிப்பிட்ட திகதியில் கையளித்தோம் என யாராவது சொல்லும்போது, பொறுப்புவாய்ந்த ஒரு அரசாங்கம் அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பையும், கடமையையும் கொண்டுள்ளது. யாருமே சரணடையவில்லை எனக் கூறும் அவர்கள், பாராபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் மறுக்கின்றார்கள்.
பாராபட்சமற்ற விசாரணையை முன்னெடுக்க முற்படுவது தமது இராணுவத்தினரதும், கட்டளைகளைப் பிறப்பித்த சிவில் அதிகாரிகளினதும் குற்றங்களை அம்பலப்படுத்திவிடும் என்பதால்தான் அவர்கள் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள். அதனால் நாம் போர்க் குற்ற விவகாரத்தையும், ஏனைய விவகாரங்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்குப் பாரப்படுத்துவது அவசியமானதாகும். இரண்டு வருட இறுதியில் மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் புதிய கதைகளைச் சொல்லிக்கொண்டு வரும் என்பதை நீங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்தக் காலப்பகுதியில் அவர்கள் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பார்கள். பௌத்த விகாரைகளை அமைப்பார்கள்.
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படுபடும் வகையிலான தீர்வு யோசனையை பகிரங்கமாக வெளிப்படுத்துபவருக்கே நாம் ஆதரவளிப்போம். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வுத் திட்டம் குறித்து நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். இரண்டு அல்லது அதற்கு மேலான மாகாணங்கள் இணையத்தக்க வகையில் ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சி வழங்கப்பட வேண்டும். 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அநுராதபுரத்தில் சில வருடங்களின் முன்னர் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அனைத்து மாகாண முதலமைச்சர்களும் தமது மாகாணங்களுக்கு சுயாட்சி தேவை என்பதை ஜனாதிபதி முன்பாகத் தெரிவித்திருந்தார்கள் என்பதையும் அமெரிக்க குழுவினருக்கு நான் சுட்டிக்காட்டினேன்.
>ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபாய ராஜபக்ஷ போட்டியிடுவது தொடர்பாக வெளிவரும் செய்திகளையிட்டும் அமெரிக்க குழுவினர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதற்குப் பதிலளித்த போது, கோத்தாபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால், அவரது அமெரிக்க பிரஜாவுரிமையை மீளப்பெற்றுக்கொள்வதில் சிரமமிருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினேன். அதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம் எனவும் தெரிவித்தேன்.
ஏப்ரல் 21 தாக்குதல் சிங்களவர்களின் கண்களைத் திறந்துவிட்டுள்ளது. யார் உண்மையான பயங்கரவாதிகள் (ஐ.எஸ்) யார் உண்மையான விடுதலைப் போராளிகள் (தமிழ்ப் போராளிகள்) என்பதை இப்போதுதான் சிங்களவர்கள் உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவாக விளக்கிக்கூறினேன்” எனவும் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
ஊடகப் பிரிவு
தமிழ் மக்கள் கூட்டணி